புதுவையில் கொரோனா தொற்று நின்று விட்டது- புதுவை 2ம் இடத்திலிருந்து முதல் நிலைக்கு வந்தது.
புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புதுவை கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களும் நல்ல நிலையில் உள்ளனர். கொரோனா பரவலில் நாம் முன்பு 2-ம் நிலையில் இருந்தோம். அதாவது வெளியூர் சென்று விட்டு வந்தவர்கள் மூலம் அவரை சார்ந்தவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவி இருந்தது. அவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது வெளியூர் சென்று வந்தவர்கள் மட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எனவே பரவல் நிலை 2-ல் இருந்து முதல் நிலைக்கு வந்துவிட்டோம். புதுவையில் யாருக்காவது வைரஸ் தொற்று உள்ளதா? என்பதை கண்டறிய வீடு வீடாக சென்று மருத்துவ குழுவினர் ஆய்வு நடத்தி வருகின்றனர். இதுவரை 9 லட்சத்து 96 ஆயிரம் பேருக்கு இந்த சோதனை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இன்றுடன் அனைவருக்கும் சோதனை நிறைவடைந்து விடும். அதன்பின் 2-ம் கட்டமாக மீண்டும் சோதனை தொடங்க உள்ளோம்.
கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா? என்பதை கண்டறியும் சோதனை ஜிப்மரில் மட்டுமே நடந்து வந்தது. ஆனால் தற்போது கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் இந்த சோதனையை நடத்த மத்திய அரசு அனுமதித்துள்ளது. அங்கு 30 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் ஒருவருக்குகூட தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.