இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை (சிஏஏ) ரத்து செய்யக் கோரி சட்டப்பேரவையில் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தாக்கல் செய்த தீர்மானம் நிறைவேறியது.
இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி முதல்வர் மு.க. ஸ்டாலின் கொண்டு வந்த அரசினர் தனித் தீர்மானம் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக், தமிழக சட்டப்பேரவையில் இன்று, இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரும் தீர்மானத்தை ஸ்டாலின் முன்மொழிந்து பேசுகையில், குடியுரிமை பெற மதம் அடிப்படை அல்ல. மதத்தினை அடிப்படையாக கொண்டு எந்த சட்டத்தையும் கொண்டு வர முடியாது. இலங்கை தமிழர்கள் வஞ்சிக்கப்பட்டு உள்ளனர்.
இந்திய நாட்டின் ஒற்றுமை, மத நல்லிணக்கத்தை போற்றிப் பாதுகாக்க இந்தியக் குடியுரிமைத் அகதிகளாக வருபவர்களை சக மனிதர்களாக பார்க்க வேண்டும். மத்திய அரசு வஞ்சனையுடன் செயல்படுகிறது. மதம், மொழி, இனம் கடந்து ஒற்றுமையுடன் மக்கள் வாழ்கின்றனர். நல்லிணக்கத்திற்கு எதிராக உள்ள இந்த சட்டம் தேவையா? மக்களாட்சி தத்துவத்தின்படி மக்களின் கருத்துகளை அரசு கேட்க வேண்டும். ஒற்றுமையை மத நல்லிணக்கத்தை போற்றி பாதுகாக்க இந்த சட்ட திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும்.
அகதிகளாக வருவோரை மதரீதியாக பாகுபடுத்தி பார்க்கும் வகையில் சட்டம் உள்ளது . சிஏஏ சட்டம் இலங்கை தமிழர்களுக்கு விதிக்கப்பட்ட மாபெரும் துரோகம். இலங்கை தமிழர் பற்றி மத்திய அரசு கவலைப்படவில்லை. சட்டப்படியான சமத்துவம், பாதுகாப்பை அரசு மறுக்க முடியாது. குடியுரிமை சட்டம் மதத்தை அடிப்படையாக கொண்டு குடியுரிமை வழங்க வகை செய்வதாக உள்ளது என முதல்வர் ஸ்டாலின் தீர்மானத்தில் குற்றஞ்சாட்டியிருந்தார்.