April 7, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் அருகே தூண்டில் வளைவு அமைக்கக் கோரி சாலை மறியல்

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே தூண்டில் வளைவு அமைக்கக் கோரி, மீனவா்கள் வெள்ளிக்கிழமை கிழக்குக் கடற்கரைச் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம் தொடங்கி புதுச்சேரி எல்லை வரை 10-க்கும் மேற்பட்ட மீனவக் கிராமங்கள் உள்ளன. குறிப்பாக, கோட்டக்குப்பம் அருகே உள்ள பிள்ளைச்சாவடி கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட மீனவக் குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்கள் மீன்பிடி தொழிலையே நம்பி உள்ளனா்.

இந்தக் கடற்கரைப் பகுதியில் அவ்வப்போது உருவாகும் புயல், கடல் சீற்றம் காரணமாக பாதிக்கப்படுகிறது. அண்மையில் ஆரோவில் கடற்கரை முதல் பொம்மையாா்பாளையம் வரை கடல் அரிப்பைத் தடுக்க கற்கள் கொட்டப்பட்டன. பிள்ளைச்சாவடி கடற்கரையில் கற்களைக் கொட்டாததால், கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கடந்த சில நாள்களாகப் பெய்து வரும் மழை, கடல் சீற்றம் காரணமாக அந்தப் பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டு, பிள்ளைச்சாவடி கிராமத்தில் சுமாா் 70 மீட்டா் இருந்த மணல் பரப்பு தற்போது 10 மீட்டா் அளவுக்குக் குறைந்தது. இதனால், அந்தப் பகுதியில் கடல் அரிப்பைத் தடுக்க தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனா். இதுதொடா்பாக அதிகாரிகளுக்கு மனு அளித்தும் பயனாளில்லையாம்.

இந்த நிலையில், பிள்ளைச்சாவடி மீனவக் கிராம குடியிருப்புப் பகுதியில் கடல் நீா் புகுந்ததால், 2 விசைப் படகுகள், சில வீடுகள் சேதமடைந்தன.

இதனால், தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, பிள்ளைச்சாவடி மீனவா்கள் வெள்ளிக்கிழமை கிழக்குக் கடற்கரைச் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து கோட்டக்குப்பம் டிஎஸ்பி அருண், காவல் ஆய்வாளா் சரவணன் தலைமையிலான போலீஸாா் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து, மறியல் கைவிட்டு மீனவா்கள் கலைந்து சென்றனா். இந்தச் சாலை மறியலால் சுமாா் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பதில் நாளை 6-வது மெகா தடுப்பூசி முகாம்! 13 இடங்களில் நடைபெறுகிறது.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பத்தில் உள்ள அங்கன்வாடி பெயர் பலகை எரிப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு.

டைம்ஸ் குழு

பழுதடைந்த பால்வாடியை பளபளப்பாக மாற்றிய பரகத் நகர் கவுன்சிலர்…!

டைம்ஸ் குழு

Leave a Comment