தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, பரவலாக மழை பெய்து வருகிறது. கோட்டக்குப்பம் பகுதியில் கடந்த ஒரு வாரமாகவே விட்டுவிட்டு மழை பெய்து வந்த நிலையில், நேற்று நள்ளிரவு முதல் கனமழை முதல் மிக கன மழை பொலிந்து வருகிறது.
கோட்டக்குப்பம் பேரூராட்சிக்கு உட்பட்ட தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளதாக வந்த தகவல்கள் அடிப்படையில் பேரூராட்சி ஊழியர்கள் ராட்சத டீசல் பம்ப் செட் மூலமும், ஜேசிபி இயந்திரங்கள் மூலமும், அங்கங்கே தேங்கியுள்ள மழை நீர் அகற்றும் பணி கோட்டகுப்பம் பேரூராட்சி சார்பாக துரிதமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தமிழகத்திற்கான மழை முன்னறிவிப்பு தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறியதாவது:-
தெற்கு வங்கக்கடல் பகுதியில் நாளை புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, தமிழக கரையை நெருங்கக் கூடும். இதன் காரணமாக செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், டெல்டா மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.