நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்தது. வேட்புமனுக்களை தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் அனைத்து பகுதிகளிலும் கூட்டம் அலைமோதியது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறும். 7ஆம் தேதி வாபஸ் பெற கடைசி நாள் அன்றைய தினம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும்.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர்கள், 7,621 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,838 பதவியிடங்களுக்கு வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.
கோட்டக்குப்பம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை, முதல் இரண்டு நாட்கள்(28, 29 ஜனவரி ) யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில், மூன்றாவது(31/01/2022) நாளில் 7 பேரும், 4-வது நாளில்(01/02/2022) 14 பேரும், 5-வது நாளில்(02/02/2022) 43 பேரும் மற்றும் நேற்று (03/02/2022) 75 பேரும் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், கடைசி நாளான இன்று மேலும் 22 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. கோட்டக்குப்பம் நகராட்சி முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்தவா்களின் மொத்த எண்ணிக்கை 161.
வேட்புமனு தாக்கல் செய்துள்ள கட்சிகளின் முழு விவரம் கீழே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறுகிறது. 7ஆம் தேதி வரை வேட்பு மனுவை திரும்ப பெறுவதற்கு கடைசி நாளாகும். அன்றைய தினமே தேர்தல் களத்தில் நிற்கும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்படும். சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னங்களும் ஒதுக்கப்படும்.
பிப்ரவரி 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். 22ஆம் தேதியன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும். அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும். மார்ச் 4ஆம் தேதி மேயர், துணை மேயர், நகராட்சித்தலைவர், பேரூராட்சித் தலைவர் ஆகியோருக்கான மறைமுகத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.