கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு மகளிர் பி.யூ. கல்லூரியில் கடந்த டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிந்து வந்த 6 முஸ்லிம் மாணவிகளுக்கு வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், கல்லூரி நிர்வாகத்திற்கு கண்டனம் தெரிவித்து 6 மாணவிகளும் ஹிஜாப் அணிந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
மேலும், கல்லூரி நிர்வாகம் தங்களது உடை விவகாரத்தில் தலையிடுவதாக கர்நாடக உயர் நீதிமன்றத்திலும், தேசிய மனித உரிமை ஆணையத்திலும் அவர்கள் முறையிட்டுள்ளனர்.
இந்நிலையில் ஹிஜாப் தடையை கண்டித்து, கோட்டக்குப்பம் காயிதே மில்லத் வளைவு முன்பாக கோட்டக்குப்பம் கீவ்ஸ் சார்பாக கர்நாடகாவில் அரசு கல்லூரி மாணவிகள் ஹிஜாப் அணிவதை தடை செய்து அவர்களின் மத உரிமையை பறித்த கல்லூரி நிர்வாகங்களையும், பாரதிய ஜனதா கட்சி அரசையும் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு அவர்களுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.