கோட்டக்குப்பம் அருகே சின்னமுதலியார் சாவடி சுனாமி குடியிருப்பில் இருந்து ஆரோவில் செல்லும் சாலையின் அருகே ஓடை செல்கிறது.
ஒரு குறிப்பிட்ட இடத்தில் தனிநபர்கள் ஓடையில் கற்களை கொட்டி தடுத்து அங்குள்ள மரங்களை வெட்டியதாக சின்னமுதலியார் சாவடிகுப்பம் தி.மு.க. கவுன்சிலர் வீரப்பன் தலைமையில் அப்பகுதி பஞ்சாயத்தார்கள் மற்றும் பொது மக்களும், இதேபோல் சின்ன முதலியார் சாவடி கவுன்சிலர் சரவணன் தலைமையில் ஊர் பஞ்சாயத்தார்கள் மற்றும் பொதுமக்களும், சம்பவ இடத்தில் திரண்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் வானூர் தாசில்தார் உமா மகேஸ்வரன், கோட்டக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஓடையில் மண் கொட்டிய இடத்தை பார்வையிட்டனர்.
அப்போது அங்கு திரண்டு இருந்த பொதுமக்கள் ஆரோவில்லில் இருந்து சின்னமுதலியார் சாவடி வழியாக மழை, வெள்ளம் காலங்களில் தண்ணீர் இந்த ஓடை வழியே சென்று தான் கடலில் கலக்கிறது. இந்த ஓடை ஏற்கனவே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நிலையில் அதில் மண்ணை கொட்டி மீண்டும் ஆக்கிரமிப்பு செய்வது கண்டிக்கத்தக்கது. இதுதொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
இதையடுத்து வருவாய்த் துறை மற்றும் போலீசார் ஊர் பொதுமக்களிடம் இந்த பிரச்சினைக்கு உடனடி தீர்வு காணப்படும் என உறுதி அளித்தனர். இதனை ஏற்று பொது மக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் சின்ன முதலியார் சாவடி சுனாமி குடியிருப்பு அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.