நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற வார்டு கவுன்சிலர்கள் பதவியேற்பு விழா இன்று(02/02/2022) கோட்டக்குப்பம் நகராட்சி அலுவலக வளாகத்தில் காலை 10 மணி அளவில் நடைபெற்றது.
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் 19-ந் தேதியன்று நடைபெற்றது. இதன் அடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 3 நகராட்சிகளின் 102 நகரமன்ற வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 7 பேரூராட்சிகளின் 106 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் தேர்தல் நடந்தது.
அதனை தொடர்ந்து 22-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் கோட்டக்குப்பம் நகராட்சியில் 27 வார்டுகளில், திமுக 14 இடங்களில் தனித்து வெற்றி பெற்றது. அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலா ஒரு இடத்தையும் பிடித்து திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது.
இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 27 கவுன்சிலர்களும் இன்று (புதன்கிழமை) பதவியேற்பு விழா கோட்டக்குப்பம் நகராட்சி அலுவலக வளாகத்தில், நகராட்சி ஆணையர் முன்னிலையில், வார்டு கவுன்சிலர்களாக பதவிப்பிரமாணம் ஏற்றுக்கொண்டனர்.
கோட்டக்குப்பம் நகராட்சி ஆணையர், ஒவ்வொரு வார்டு கவுன்சிலர்களும் 35 வினாடிகள் கொண்ட உறுதிமொழியை முன்மொழிந்து பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இதைத்தொடர்ந்து மார்ச் 4ம் தேதி (வெள்ளி) காலை 9.30 மணிக்கு மீண்டும் மன்ற கூட்டம் நடைபெறும். அப்போது, கோட்டக்குப்பம் நகராட்சி தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். 4ம் தேதி (நாளை மறுதினம்) மாலை 2.30 மணிக்கு துணை தலைவர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் கோட்டக்குப்பம் நகராட்சியில் திமுக மற்றும் அதன் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால், திமுக அறிவிக்கும் நபர்களே தலைவர் மற்றும் துணை தலைவர் தேர்வு செய்யப்படுவது உறுதியாகி உள்ளது.