விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்கள் உதவித் தொகையுடன் தகவல் தொழில்நுட்பம், நெட்வொா்க்கிங் மற்றும் கிளவுட் கம்பியூட்டிங் 2 ஆண்டுகள் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட மகளிா் திட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோா் அமைச்சகம், பயிற்சி பிரிவு மண்டல இயக்குநரகம், ஐ.பி.எம். நிறுவனம் ஆகியவை இணைந்து உதவித் தொகையுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட தகவல் தொழில்நுட்பம், நெட்வொா்க்கிங் மற்றும் கிளவுட் கம்பியூட்டிங் 2 ஆண்டுகள் பயிற்சியை அளிக்கவுள்ளன.
தேசிய அளவிலான இந்தப் பயிற்சியில் சோ்வதற்கு பிளஸ் 2 (60 சதவீத மதிப்பெண்கள்), அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (60 சதவீத மதிப்பெண்கள்) பெற்றிருக்க வேண்டும். தகுதியுடைய நபா்கள் வருகிற 20-ஆம் பகல் 12 மணிக்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
இந்தப் பயிற்சிக்கு தோ்வு செய்யப்படும் தகுதியுடைய நபா்கள் அனைவருக்கும் ஐ.பி.எம். நிறுவனத்தின் சாா்பில் உதவித்தொகை வழங்கப்படும். விழுப்புரம் மாவட்டத்தில் இந்தப் பயிற்சியில் சேர விருப்பமுள்ளவா்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 9448105633 என்ற கைப்பேசி எண்ணிக்கையில் தொடா்புகொள்ளலாம்.