கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகத்தின் இப்தார் நோன்பு துறப்பு நிகழ்வு சனிக்கிழமை 23/04/2022 அன்று மாலை சர்வ சமய கூடலாக கோட்டக்குப்பம் சரவி கிரீன்ஸ் திறந்தவெளி அரங்கில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் ஹாபிழ் மௌலவி எஸ்.ஏ. புஹாரி மௌலானா தலைமையேற்க, அஞ்சுமன் தலைவர் டாக்டர் எல். எம். ஷரீஃப் முன்னிலை வகித்தார். செயலாளர் லியாகத் அலி ஒருங்கிணைத்து வழி நடத்திய நிகழ்வில் உரையாற்றிய அருள்வள சிவ அறக்கட்டளையின் நிறுவனர் அய்யா சாந்தகுமார், சமயங்கள் காட்டும் அன்புநெறியை அழகாக எடுத்துரைத்தார். தொடர்ந்து உரையாற்றிய மௌலவி புஹாரி சாஹிப் இஸ்லாம் குறித்த தவறான புரிதல்களைக் களைந்திடும் வரலாற்று செய்திகளை வரிசைப் படுத்தி நல்லதொரு இணக்க உரை ஆற்றினார்.
நோன்பு துறப்பு நிகழ்ச்சியைத் தொடர்ந்து கோட்டக்குப்பம் நகரமன்றத்திற்கு புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தலைவர், உறுப்பினர்களுக்கு பாராட்டரங்கம் நடத்தப்பட்டது.
நிகழ்வுக்கு தலைமையேற்ற பேரா. முனைவர் நா. இளங்கோ வெறுப்பு அரசியல் மையப்படுத்தப்பட்ட தற்போதைய அரசியல் சூழலில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அதற்கு நேரெதிரான பாதையைத் தேர்வு செய்ய வேண்டிய அவசியத்தை அற்புதமாக விளக்கினார்.
பாராட்டுரை வழங்கிய மீனவர் விடுதலை வேங்கைகள் நிறுவனத் தலைவர் மங்கையர்செல்வன், இந்துத்துவ பார்ப்பனிய மேலாதிக்கத்தின் செயல்திட்டம் எத்துணை வேகமாக மக்களை பிளவுபடுத்தி வருகிறது என்பதை கோடிட்டுக் காட்டி நாம் எப்படி எல்லா வகையிலும் ஒருங்கிணைந்து வலுப்பட வேண்டும் என்பதை சுட்டிக் காட்டினார். தொடக்கமாக பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை பொது செயலாளர் தோழர். சு. பாவாணன் ஒடுக்கப்பட்ட இனங்களின் பக்கம் நின்று, அவர்களின் உரிமைகளைக் காப்பாற்றப் படுவதை உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும், மக்களோடு மக்களாக நின்று பாடுபடுவதன் மூலம் இந்த வெற்றியை அவர்கள் நிரந்தரமாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.
நிகழ்வில் கலந்து கொண்ட எழுத்தாளரும் ஊடகப் போராளியுமான பவா சமத்துவனின் காஷ்மீர் ஒரு எறியவனின் குறிப்புகள் நூல் நகரமன்ற தலைவர் – உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. அஞ்சுமன் அமைப்புச் செயலாளர் அனஸ் அனைவரையும் வரவேற்றார். அஞ்சுமன் நிர்வாகிகள், ஊர் பிரமுகர்கள் நகரமன்ற தலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகளைப் பாராட்டிச் சிறப்பு செய்தனர். இறுதியாக அஞ்சுமன் செயலர் அனைவருக்கும் நன்றி கூறினார்..