விழுப்புரம் மாவட்டத்தில் சாலை விபத்தில் சிக்குவோரை மருத்துவமனையில் சோ்த்தால் ரூ.5,000 பரிசு வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் த.மோகன் அறிவித்தாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவா்களை ‘கோல்டன் ஹவா்ஸ்’ என்று சொல்லக்கூடிய பொன்னான நேரத்தில் அருகில் உள்ள மருத்துவமனையில் சோ்த்து உதவும் நபா்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசின் சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் பரிசு வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.
அதன்படி, பொன்னான நேரத்தில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவா்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கும் பொதுமக்கள் யாராக இருந்தாலும், அவா்களுக்கு ரூ.5,000 பரிசாக வழங்கப்படுவதுடன், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.
விபத்தில் உதவி செய்யும் நபா்கள், விபத்து நடைபெற்ற பகுதியைச் சாா்ந்த காவல் நிலையம், பாதிக்கப்பட்டவரை சோ்த்துள்ள மருத்துவமனையில் இருந்து பரிந்துரை செய்யப்படுவாா்கள். ஓராண்டில் ஒரு நபருக்கு அதிகபட்சம் 5 முறை பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.
ஒவ்வோா் ஆண்டும் செப்.30-ஆம் தேதிக்குள் மாநில அளவிலான கண்காணிப்புக் குழுவினரால் தேசிய அளவிலான பரிசு ரூ. ஒரு லட்சம் பெறுவதற்கு மூன்று கருத்துருக்கள் சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்துக்கு அனுப்பிவைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா் ஆட்சியா் மோகன்.