கோட்டக்குப்பம் பகுதியில் தொடர் மின்வெட்டு மற்றும் குறைந்த மின்னழுத்தம் (லோ-வோல்ட்டேஜ்) காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது சம்பந்தமாக அதிகாரிகளிடம் பலமுறை சொல்லியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
குறிப்பாக, நேற்று(15-06-2022) இரவு கோட்டகுப்பம் முழுவதும் குறைந்த மின்னழுத்தம் நீடித்து வந்த நிலையில், சுமார் 11:30 மணி அளவில் மழை பொழிந்ததும், இரவு முழுவதும் மின்சாரம் தடை செய்யப்பட்டது. மீண்டும் விடியற்காலை அளவில் மின்வினியோகம் வழங்கப்பட்டது. மேலும் பகல் மற்றும் இரவு நேரங்களில் அடிக்கடி குறைந்த மின் அழுத்தம் வருவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
குறைந்த அழுத்த அளவு மின்சாரமே வருவதால் வீடுகளில் பயன்படுத்தப்படும் மிக்ஸி, கிரைண்டர், பிரிட்ஜ், மின்விசிறி, தொலைக்காட்சி மற்றும் மின்மோட்டார்களை முறையாக, முழுமையாக இயக்க முடியாத நிலை உள்ளது. மேலும், இதனால் மின் சாதன பொருட்கள் பாதிப்படைவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது நமது பகுதியில் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் குறைந்த மின்னழுத்தத்தால் இரவு நேரங்களில் மின் விசிறியை கூட இயக்க முடியாததால் முதியவர்கள், குழந்தைகள், நோயாளிகள் உள்ளிட்ட அனைவரும் வியர்வையாலும், கொசு கடியாலும் தூங்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஆகவே, கோட்டக்குப்பத்தில் ஏற்படும் தொடர் மின்வெட்டு மற்றும் குறைந்த மின்னழுத்தம் காரணத்தை ஆராய்ந்து தீர்வு காணப்பட வேண்டும் எனவும், நமது பகுதிக்கு வரவேண்டிய துணை மின்நிலையத்தை உடனடியாக அமைக்கப்பட வேண்டும் எனவும், மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.