கோட்டக்குப்பம் ஹாஜி ஹுசைன் தெரு பகுதியில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் பார்க்கிங் வசதி இல்லாத காரணத்தினால் வாகனங்கள் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதால் அப்பகுதி மக்கள் வாகன நிறுத்தும் வசதி செய்யும் வரை இந்த தனியார் மண்டபத்திற்கு தடை கோரி மனு அளித்துள்ளனர்.
சமீபத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த தனியார் மண்டபத்திற்கு வருகை புரிந்தனர். சுமார் 500-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனம் மற்றும் 100-க்கும் மேற்பட்ட நான்கு சக்கர வாகனம் ஆகியவை மண்டபத்தில் வாகன பார்க்கிங் வசதி இல்லாத காரணத்தினால் ரஹ்மத் நகர் பகுதியில் உள்ள ஹாஜி ஹுசைன் தெரு, பள்ளிவாசல் தெரு, சிராஜ் மில்லத் தெரு மற்றும் கடற்கரை கடற்கரை சாலை தெருக்களில் வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது.
வெறும் 15 அடிக்கு உள்ளான சாலைகளில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வாகனங்களால் அவ்வழியாக செல்லும் ரஹ்மத் நகர் பொதுமக்கள் மற்றும் இந்த சாலைகளை பயன்படுத்தும் ஊர் பொதுமக்கள் பெரும்பாலானோர் இன்னலுக்கு ஆளாகின்றனர். மேலும் நேற்று இரவு மருத்துவமனை செல்லும் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
ஆகவே பொது மக்களுக்கு பெரும் இடையூறு கொடுத்து வரும் அந்த தனியார் மண்டபத்தில் வாகன வசதி செய்யும் வரை திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க கோரி மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த மனு நகராட்சி ஆணையர், நகர்மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர், ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசல் மற்றும் 20-வது வார்டு கவுன்சிலர் ஆகியோரிடம் அளிக்கப்பட்டுள்ளது.