இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. நாட்டின் 76-வது சுதந்திர தினம், சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவாக இன்று உற்சாகத்துடனும், கோலாகலத்துடனும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் வகையில், கோட்டக்குப்பம் நகராட்சியிலும் இன்று ஆணையர் திருமதி. பாணுமதி அவர்கள் தலைமையில் சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் முதலாவதாக, கோட்டக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார். அதனைத் தொடர்ந்து நகர மன்ற தலைவர் எஸ்.எஸ்.ஜெயமூர்த்தி அவர்கள் தேசிய கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
அதில் அவர் கூறியதாவது, “கோட்டக்குப்பம் நகராட்சியில், இதுவரை இல்லாத அளவில் தெரு விளக்கு 90 சதவீதம் பொருத்தப்பட்டுள்ளது, மீதமுள்ள 10 சதவீதம் விரைவில் பொருத்தப்படும் என தெரிவித்தார்.
அடிப்படை தேவையான குடிநீர் பிரச்சனையை விரைவில் தீர்க்கப்படும். நகராட்சியை தூய்மையாக வைத்து பாடுபடும் துப்பரவு பணியாளர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
கோட்டக்குப்பம் நகராட்சியில் மின் பற்றாக்குறையை தீர்ப்பதற்கு விரைவில் துணை மின் நிலையம் அமைக்கப்படும் எனவும், வரும் 30 நாட்களில் மின் பற்றாக்குறை தீர்க்கப்படும் என உறுதி அளித்தார்.
கோட்டக்குப்பம் நகராட்சிக்கு கீழ்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்க தனது சொந்தமான இடத்தை கோட்டக்குப்பம் நகராட்சிக்கு தானமாக வழங்கிய ஜனாப் யூசுப் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும், கோட்டக்குப்பம் நகராட்சி எதிரில் உள்ள திடலில் புதிய நகராட்சி அமைக்கப்படும் எனவும், மற்ற இதர அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பேன்” என கூறினார்.
இந்நிகழ்ச்சியில் கோட்டக்குப்பம் நகரமன்ற துணைத்தலைவர் ஜீனத் பீ முபாரக், நகர மன்ற உறுப்பினர்கள், அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், பல்வேறு அமைப்பு நிர்வாகிகள், வணிகர்கள் சங்கங்களின் நிர்வாகிகள், மீனவ பஞ்சாயத்தார்கள், அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகள், ஊர் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.