கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாக சபை சார்பில் குளம் சீரமைப்பு பணி கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது.
கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசலுக்கு சொந்தமான நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த குளம் வெகு மக்களால் முற்காலத்தில் பயன் பெற்று வந்தது. கோட்டக்குப்பம் மக்களின் பிரதான குளியல் அறையாக விளங்கிய இந்த குளம், அனைத்து மக்களின் மிகவும் பயன்படக்கூடிய இடமாக விளங்கி வந்துள்ளது.
இந்த குளத்தில் முதியவர்கள் முதல் வாலிபர்கள் வரை, காலை முதல் மாலை வரை இந்த குளத்தில் நீராடி மகிழ்ந்து வந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் வாலிபர்கள் தங்கள் உடல் நலத்தை பெருக்கிக் கொள்ள, இங்கு நீச்சல் அடிக்க கற்றுக் கொண்ட இடமும் இதுதான்.
மழைக்காலங்களில் கோட்டக்குப்பத்தில் மழை நீரை தன்னகத்தை சேர்த்துக் கொள்ளும் மிகப்பெரிய நீர் தேக்க இடமாக இந்த குளம் விளங்கியுள்ளது. நீர் அதிகமாக இருந்த காலத்தில் ஆண்டுக்கு ஒரு முறை பள்ளிவாசல் நிர்வாகம் சார்பில் குளத்தில் மீன் பிடித்து அந்த மீனை பொதுமக்களுக்கு ஏலம் மூலம் விற்பனை செய்து பள்ளிவாசல் நிர்வாகம் ஒரு பெருந்தொகையை வருமானமாக பெற்று வந்தது.
இவ்வாறு நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த குளம், கடந்த சில வருடங்களாக பராமரிப்பு இன்றி, நீர்வரத்து அனைத்தும் அடைக்கப்பட்டு, குளம் வற்றிப் போய், சிதலமடைந்து காட்சியளித்து வந்தது. இப்படி பல சிறப்பு மிக்க இந்த குளம் வற்றி காட்சியளிப்பதால் ஊர் மக்களும், சமூக ஆர்வலர்களும் பெரும் துயரமாகவும், கவலையாகவும் இருந்து வந்தது.
இந்நிலையில், தற்போதிய ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாக சபை இதனை ஒழுங்குபடுத்தி, பராமரிப்பு பணி மேற்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு, இதன் முதல்கட்டமாக ஜேசிபி(JCB) இயந்திர மூலம் குளத்தினை தூர்வாரி , பழையபடி அதில் நீர்த்தேக்கி, மேலும் சுற்றியுள்ள நிலத்தடி நீரை பாதுகாக்கும் நோக்கில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த முயற்சிக்கு ஊர் பொதுமக்களும் மற்றும் சமூக ஆர்வலர்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.