கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் வக்ஃப் சொந்தமான எம்.ஜி.ஆர் நகர் மேற்கில் உள்ள இடத்தில் கோட்டக்குப்பம் நகராட்சி நிர்வாகம் உரிய அனுமதி பெறாமல், அத்துமீறி சுமார் 300 அடி நீளத்திற்கு குடிநீர் குழாய்களை பதித்துள்ளனர்.
கடந்த 15-9-2022 அன்று கோட்டக்குப்பம் பெரிய பள்ளிவாசல் சொந்தமான வக்ஃப் இடத்தில், எந்தவித அனுமதி பெறாமலும், முன்னறிவிப்பு இன்றியும் கோட்டக்குப்பம் நகராட்சி உள்ளூர் நிர்வாகம் குடிநீர் குழாய் அமைத்துள்ளது.
தகவல் அறிந்த ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அந்த இடத்திற்கு விரைந்து, சம்பந்தப்பட்டவர்களிடம் ஏன் குடிநீர் குழாய்களை உரிய அனுமதி பெறாமல் அத்துமீறி ஏன் பதித்துள்ளீர்கள் என முறையிட்டனர். மேலும், குடிநீர் பைப் லைன் அமைக்க மாற்றுப்பாதை இருந்தும், ஜாமிஆ மஸ்ஜித்துக் சொந்தமான வக்ஃப் இடத்தில் ஆக்கிரமித்து ஏன் பதித்துள்ளீர்கள் என கேள்வி எழுப்பினர்?
மேலும், நேற்று(17/09/2022) இது சம்பந்தமாக ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாக சபை சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது, “கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் பெரிய பள்ளிவாசலின்(வக்ஃப்) சொந்த இடமான எம்.ஜி.ஆர் நகர் மேற்கில் உள்ள இடத்தில் கடந்த 15-09-2022 அன்று இடத்தின் உரிமையாளரான ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாகத்திடம் முன்னறிவிப்பின்றியும், அனுமதிபெறாமலும், நமது கோட்டக்குப்பம் நகராட்சியின் மூலம் பைப்லைன் அமைத்துள்ளீர்கள். இது சம்பந்தமாக நகராட்சி ஆணையரான தங்களிடம் அலைபேசியில் 17-09-2022. அன்று காலையில் ஏன் எங்களிடம் அனுமதி பெறாமல் பைப் லைன் அமைத்தீர்கள்? என்று கேட்டதற்கு, அது பள்ளிவாசல் இடம் என்று எனக்கு தெரியாது என்று தாங்கள் கூறியதை தங்கள் நினைவிற்கு கொண்டுவருகிறோம். இப்படி நகராட்சி ஆணையரின் கவனத்திற்கே கொண்டுவராமல் சுமார் 300 அடி இடத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள பைலைனை உடனடியாக அகற்றிடுமாறும், அத்துமீறி பைப்லைன் அமைத்த ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனுவானது, “மாண்புமிகு தமிழக முதல்வர், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர், சென்னை தலைமைச் செயல் அலுவலர்- வஃக்ப் வாரியம், தலைவர் – வஃக்ப் வாரியம் மற்றும் பண்ருட்டி கண்காணிப்பாளர் – வஃக்ப் வாரியம், அவர்கள் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.