கோட்டக்குப்பம் சமரசம் நகர் அருகிலுள்ள புதிதாக உருவாக்கப்பட்ட தௌலத் நகர் பகுதியில் சுமார் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதியில் கழிவுநீர் வசதியின்றி சமரச நகர் பகுதியில் உள்ள அனைத்து வீடுகளில் உள்ள கழிவுநீர் வழிந்தோடி தௌலத் நகர் பகுதியில் உள்ள ஒரு காலி மனையில் சூழ்ந்து, குளம்போல் கழிவுநீர் காட்சியளிக்கின்றது. இதனால், அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
தேங்கி நிற்கும் கழிவுநீர் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் கொசு தொல்லையால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், தேங்கி நிற்கும் கழிவு நீரில் பன்றிகள் அதிகளவில் சுற்றி வருகிறது.
வீட்டில் உள்ளே இருக்கும் குளிர்சாதன பெட்டியில் தண்ணீர் தேங்கியுள்ளதா என்று பரிசோதிக்கும் நகராட்சி ஊழியர்கள், இங்கு வெளியில் தேங்கி நிற்கும் கழிவுநீரை கண்டு எந்த வித நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என்று அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இது சம்பந்தமாக பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
மேலும், பல்வேறு தொற்று நோய் பரவுவதற்குள் தேங்கிய கழிவு நீரை போா்க்கால அடிப்படைகளில் வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.