கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தினமும் பொதுமக்களை தெரு நாய்கள் அச்சுறுத்தி வந்திருந்தது. இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இது சம்பந்தமாக, கோட்டக்குப்பம் டைம்ஸ் சார்பில் கடந்த மாதம் 10-ஆம் தேதி தெரு நாய்களை பிடிக்க வேண்டும் என நகராட்சியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அதேபோல், தற்போது ஒவ்வொரு வார்டாக நடைபெற்று வரும் பகுதி சபை கூட்டங்களிலும் பொதுமக்கள் நாய்கள் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர் கோரிக்கை வைத்திருந்தனர்.
மேலும், பரகத் நகர் அல்மஸ்ஜிதுல் முபாரக் வல் மதரஸா பள்ளிவாசல் சார்பாக மக்களின் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்ட பத்து அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனுவை 15-வது வார்டு மற்றும் 22-வது வார்டு கவுன்சிலர்களிடம் அளிக்கப்பட்டது. அதில், நகரின் முக்கிய தொல்லையாக இருக்கும் தெரு நாய்களை பிடிக்க வேண்டும் என்று மனு அளிக்கப்பட்டது.
அதேபோல், கடந்த மாதம் 17-ஆம் தேதி அன்று 18-வது வார்டு நகரமன்ற உறுப்பினர் ஃபர்கத் சுல்தானா மற்றும் 22-வது நகர மன்ற உறுப்பின நாசர் அலி, தெரு நாய்களை கட்டுப்படுத்த கோரி நகராட்சி ஆணையாளரிடம் கூட்டாக மனு அளித்தனர். மேலும், பல கவுன்சிலர்கள் நகரின் முக்கிய தொல்லையாக இருக்கும் தெரு நாய்களை பிடிக்க வேண்டும் என ஆணையருக்கு கோரிக்கை விடுத்தனர்.
அதன்படி, நகராட்சி ஆணையாளர் திருமதி. பானுமதி மற்றும் நகராட்சி தலைவர் எஸ் எஸ் ஜெயமூர்த்தி அவர்களின் ஆலோசனையின்படி இன்று கோட்டக்குப்பம் நகராட்சி உட்பட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்த தெரு நாய்களை பணியாளர்கள் பிடித்து சென்றனர்.
இதனால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதேபோல், கோட்டக்குப்பம் பகுதியில் சுற்றித்திரியும் கால்நடைகளை நகராட்சி நிர்வாகம் ஒழுங்குபடுத்த வேண்டுமெனவும், கால்நடைகளை வளர்ப்பவர்களை அவற்றை உரிய கவனத்துடன் பராமரிக்குமாறு வலியுறுத்த வேண்டும் என்று கோட்டக்குப்பம் நகராட்சியை மக்கள் கேட்டு கொள்கின்றனர்.