வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது ‘மாண்டஸ்’ எனும் புயலாக வலுவடைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி தீவிரப்புயலான ‘மாண்டஸ்’ சென்னையில் இருந்து தென்கிழக்கில் 200 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. சென்னையை நோக்கி தொடர்ந்து நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், கோட்டக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 1091 தற்காலிக நிவாரண முகங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதல் கோட்டக்குப்பம், சின்ன முதலியார் சாவடி, பெரிய முதலியார் சாவடி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பொழிந்து வருகிறது.
மாண்டஸ் புயலால் கடல் சீற்றம் காரணமாக கோட்டக்குப்பம் அருகே பிள்ளைச்சாவடி மீனவர் கிராமத்தில், 3 வீடுகள் இடிந்து சேதம் அடைந்தது. கடந்த 2 நாட்களில் 5 வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன.
விழுப்புரம் மாவட்டத்திற்கு அதிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அரசு ஊழியர்கள் விடுமுறை எடுக்கக்கூடாது என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் உத்தரவிட்டுள்ளார்.