கோட்டக்குப்பதில் கடந்த 2020-ஆம் ஆண்டு கொரோனா பேரிடர் காலத்தில் மருத்துவத்திற்காக மக்கள் பெரும் அவதிக்க உள்ளாகினர். மேலும், கோட்டக்குப்பம் முத்தியால்பேட்டை எல்லையில் இரும்பு சீட் கொண்டு அடைக்கப்பட்டு, கோட்டக்குப்பத்தில் இருந்து புதுச்சேரிக்கு அவசர மருத்துவ தேவைக்கு செல்வதற்கே மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகினர். இன்று வரை அந்த நிகழ்வு அனைவருக்கும் நினைவில் இருக்கும். கோட்டகுப்பத்தில் ஒரு மருத்துவமனை அமைய வேண்டும் என கோட்டக்குப்பம் மக்களின் பல நாள் எதிர்பார்ப்பாகவே இருந்து வந்தது.
இந்நிலையில், கோட்டக்குப்பம் 18-வது வார்டு ஷாதி மஹால் தெருவில் அமைந்திருக்கும் சிதலமடைந்து தாய் சேய் நல மைய கட்டிடத்தை இடித்து விட்டு, அதே இடத்தில் புதியதாக நகர்புற நலவாழ்வு மையம் அமைக்க வேண்டும் என்று நகர மன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இக்கோரிக்கையை ஏற்று 15-வது நிதிக்குழு மான்யம் Health Grant-ன் கீழ் புதிய நகர்புற நலவாழ்வு மையம் கீழ் ரூபாய் 25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று(12/04/2023) புதன்கிழமை மாலை 4 மணி அளவில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு நகர்மன்ற தலைவர் S.S. ஜெயமூர்த்தி, நகர்மன்றத் துணைத் தலைவருமான ஜீனத் பிவி முபாரக், கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜீத் நிர்வாகிகள், நகராட்சி அதிகாரிகள், நகர்மன்ற உறுப்பினர்கள், கட்சி பிரதிநிதிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ஒரு டாக்டர், மருந்தாளுனர், செவிலியர், உதவியாளர் கொண்ட நகர்புற நலவாழ்வு மையம் கோட்டக்குப்பத்தின் பிரதான பகுதியாக கருதப்படும் ஷாதி மஹால் தெருவில் அமைய இருப்பது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பும், மகிழ்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது.