பொதுமக்கள் தங்கள் வீட்டில் உருவாகும் குப்பைகளை மக்கும் குப்பை (உணவு, காய்கறி-பழம், இறைச்சி, தோட்டம் மற்றும் காய்ந்த மலர்கள், இலை கழிவுகள்), மக்காத குப்பை (பிளாஸ்டிக் பைகள், தண்ணீர் பாட்டில், கண்ணாடி, பிளாஸ்டிக், அட்டைகள், காகிதம், செய்தித்தாள்கள், தெர்மோகோல், தோல், இரும்பு, மரம், டயர், டியூப், ரப்பர் கழிவுகள்) என வகை பிரித்து அவற்றை தினந்தோறும் வீடுகள் தோறும் வரும் நகராட்சி தூய்மை பணியாளரிடம் ஒப்படைக்கும்படி நகராட்சி சார்பாக பல அறிவிப்புகள் செய்யப்பட்டுள்ளது. இதனை, கோட்டக்குப்பத்தில் சில பகுதிகளில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது என்பது பாராட்டுக்குரியது.
எனினும், பெருவாரியான வீடுகளில் குப்பைகளை – மக்கும் குப்பை என்றும், மக்காத குப்பை என்றும் தனித்தனியாக, பிரித்து தராத காரணத்தால், அவ்வாறு குப்பைகளை பிரிக்கும் பணிகளை துப்புரவு பணியாளர்கள் செய்யவேண்டியுள்ளது, இதனால் – வீடுகளுக்கு சென்று குப்பைகள் அள்ளுவது பாதிக்கப்படுகிறது.
சில நகராட்சி ஊழியர்கள் மக்காத குப்பைகளை வாங்காமல் மக்களிடமே அல்லது அங்கேயே வைத்து விட்டு செல்கின்றனர். குறிப்பாக, நேற்று தைக்கால் தெரு சந்திப்பு மற்றும் ஷாதி மஹால் பகுதிகளில் மக்காத குப்பைகளை குப்பை கிடங்கிற்கு எடுத்து போய் கொட்டாமல் அந்தப் பகுதியிலேயே தீயிட்டு கொளுத்தி விட்டு சென்று இருக்கின்றனர்.
குப்பைகள் எரிந்து வரும் நச்சுப் புகையினால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடு உருவாகும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
இதனை, கோட்டக்குப்பம் நகராட்சி நிர்வாகம் உடனடியாக தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.