கோட்டக்குப்பம் பகுதியில் நேற்று(01/10/2023) மழை பொழிந்ததால், சுமார் இரவு 7: 30 மணி அளவில் மின் நிறுத்தம் செய்யப்பட்டது. மழை நின்று பல மணி நேரம் ஆகியும் மின்சாரம் வராததால் பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர். இது சம்பந்தமாக கோட்டக்குப்பம் ‘TNEB whatsapp’ குழுவில் பொதுமக்கள் அதிகாரிகளிடம் முறையிட்டனர். ஆனால், அதிகாரிகளிடம் எந்த தகவலும் வராததால் ஆத்திரமடைந்து சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மின்சார வாரியம் அலுவலகம் எதிரில் நள்ளிரவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மின்வாரியத்தை கண்டித்தும் கோஷமிட்டனர். இதனையறிந்த, போலீசார் அங்கு வந்து பொதுமக்களிடம் சமாதானமாக பேசினார்.
இதில் பொதுமக்கள் சமாதானம் ஆகாமல் நள்ளிரவு 12: 20 மணி அளவில் கோட்டக்குப்பம் ரவுண்டானாவில் சாலை மறியலில் ஈடுபட்டு கோஷமிட்டனர். இதனால், கிழக்கு கடற்கரை சாலையில் செல்லும் வாகனங்கள் மற்றும் புதுச்சேரியை நோக்கி செல்லும் வாகனங்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த, கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் ராபின்சன் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். மேலும், முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்கள் கோட்டக்குப்பம் மின்வாரிய அதிகாரிகள் இங்கு வர வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து கோட்டக்குப்பம் மின்வாரியம் உதவி செயற்பொறியாளர் ஆதிமூலம் அவர்களும் சம்பவ இடத்திற்கு வந்தார்.
அவரிடம் தொடர் மின்வெட்டு சம்பந்தமாகவும் மற்றும் துணை மின் நிலையம் அமைப்பு சம்பந்தமாகவும் பொதுமக்கள் அடுக்கடுக்கான கேள்வி எழுப்பினார். மேலும், மாதாந்திர பராமரிப்பு பணி அன்று மின் ஊழியர்கள் முறையாக பராமரிப்பு பணி மேற்கொள்ளவில்லை என்றும், மேலும் அடிக்கடி குறைந்த மின்னழுத்தம் ஏற்படுவதாகவும் மக்கள் குற்றம் சாட்டினர். சுமார் 2 மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தைக்கு பிறகு மக்கள் கலைந்து சென்றனர். இதனால், நள்ளிரவில் கிழக்கு கடற்கரை சாலையில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.