தமிழ்நாடு பொது மக்களுக்கு தமிழ்நாடு அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் பொதுமக்களை சென்று சேரும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சரால் மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பல்வேறு அரசு துறைகளின் சேவைகள் பொது மக்களுக்கு எளிதாக கிடைக்கப்பெறும் வகையில் தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்படுகிறது.
அது ஒரு பகுதியாக, கோட்டக்குப்பம் நகராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் கலா திருமண மண்டபத்தில் 1- வது வார்டு முதல் 9- வது வார்டு வரை உள்ள பொதுமக்களுக்கு இன்று(22/12/2023) தொடங்கி வைக்கப்பட்டது. இந்த முகாமில் மின்சார வாரியம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, சமூக நலன் துறை, மாற்றுத்திறனாளிகள் துறை, காவல் துறை, வருவாய் துறை உள்ளிட்ட 13-க்கும் மேற்பட்ட துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டு பல்வேறு கோரிக்கைகளுக்கு தீர்வு அளிக்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சியை, கோட்டக்குப்பம் நகர் மன்ற தலைவர் எஸ் எஸ் ஜெயமூர்த்தி அவர்கள் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். நகர மன்ற துணை தலைவர் ஜீனத் பீ முபாரக் மற்றும் நகராட்சி ஆணையர் திருமதி. புஹேந்திரி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினார். இம்முகாமில் நகர மன்ற உறுப்பினர்கள், மாவட்ட கண்காணிப்பு அலுவலர், வானூர் வட்டாச்சியர், மற்றும் அனைத்து அரசு துறை அலுவலர்கள், மற்றும் நகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த முகாம்களில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் அனைவரும் ஒரே குடையின்கீழ் மக்களின் கோரிக்கைகளைப் பெற்று பதிவு செய்வார்கள். முகாம்களில் பெறப்படும் மனுக்கள் அனைத்தும், சம்பந்தப்பட்ட துறைகளால் 30 தினங்களுக்குள் உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியின் அடிப்படையில் உரிய சேவைகள் மக்களுக்கு வழங்கப்படும்.