கோட்டக்குப்பம் நகராட்சி அலுவலகத்தில் நேற்று 78-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு, நகராட்சி ஆணையர் புகேந்திரி முன்னிலை வகித்தார். கோட்டக்குப்பம் நகர் மன்ற தலைவர் எஸ். எஸ். ஜெயமூர்த்தி தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.
அப்பொழுது அவர் பேசியதாவது,
- கோட்டக்குப்பம் நகராட்சிக்கு புதிய கட்டிடம் கட்ட தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு விரைவில் கட்டுமான பணி தொடங்க உள்ளது.
- மீனவ சமுதாய மக்களுக்கு உறுதியளித்தது போல் மீன் மார்க்கெட் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
- ஒரு சில இடங்களில் குடிநீர் பற்றாக்குறை இருந்தாலும் அது சரி செய்யப்பட்டு அதிகபட்சம் 15 நாட்களுக்குள் முழுவதுமாக குடிநீர் பிரச்சனை தீர்வு காணப்படும்.
- மின்சார பிரச்சனைக்கு துணை மின் நிலையம் அமைக்க இடம் வாங்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இன்னும் 3 மாதத்திற்குள் துணை மின் நிலையம் அமைத்து கோட்டக்குப்பம் பகுதிக்கு தங்கு தடை இன்றி மின்சாரம் விநியோகிக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.
- பெரிய மூளைச்சாவடியில் இருந்து கோட்டக்குப்பம் வரை 12 கோடி மதிப்பில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட உள்ளது.
- மீனவர்களை நீண்ட நாள் கோரிக்கையான சின்ன முதலியார்சாவடி தூண்டில் வளைவு அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது அதற்கான பணிகளும் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
இவ்வாறு சுதந்திர தின விழாவில் கூறினார்.
விழாவில் நகர மன்ற துணைத் தலைவர், உறுப்பினர்கள், நகராட்சி ஊழியர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.