கோட்டக்குப்பத்தில் தொடர் மின்வெட்டு என்பது வாடிக்கையாக்கிவிட்டது. குறிப்பாக சனிக்கிழமை(17/08/2024) அன்று மட்டும் 15 முறை பவர் கட் செய்யப்பட்டது. மேலும், அன்று இரவு நீண்ட நேரம் பவர் கட் செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கோட்டக்குப்பம் மின்சார வாரியம் எதிரில் முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு வந்து பொதுமக்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். போலீசார் பேச்சுவார்த்தைக்கு பொதுமக்கள் உடன்படவில்லை. மேலும், காந்தி ரோட்டில் இருபுறமும் வந்த வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டது.
அதன் பிறகு, கோட்டக்குப்பம் ரவுண்டானாவில் பொதுமக்கள் முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், கிழக்கு கடற்கரை சாலை நள்ளிரவில் 1 மணி நேரத்திற்கும் மேல் வாகனங்கள் சம்பித்து நின்றது. மேலும், சம்பவ இடத்திற்கு வந்த கோட்டக்குப்பம் இளமின் ஆய்வாளரிடம் பொதுமக்கள் சராசரியாக கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதன் பிறகு போலீசாரம், மின்சார வாரிய அதிகாரிகளும் ஞாயிற்றுக்கிழமை காலை சமாதான பேச்சு வார்த்தை நடைபெறும் என்று தெரிவித்தனர். இதனால் நள்ளிரவில் சுமார் 4 மணி நேரத்திற்கு மேல் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, இன்று(18/08/2024) மின்வெட்டு பிரச்சினை குறித்து கோட்டக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பொதுமக்கள், மின் அதிகாரிகள் இடையே சமரச கூட்டம் நடைபெற்றது. இதில் மின்வாரிய இளநிலை பொறியாளர் ஏழுமலை தலைமையில் ஊழியர்கள் மற்றும் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி தலைமையிலான போலீசார் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், மின்வெட்டு பிரச்சினை தொடர்பாக பொதுமக்கள் சரமாரியாக புகார் தெரிவித்தனர். அப்போது மின்வாரிய அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்து வைத்தனர். 15 நாட்களுக்குள் புது பீடர் மூலம் சீரான மின்சாரம் வழங்கப்படும் என மின் அதிகாரிகள் உறுதி அளித்தனர்.