கோட்டக்குப்பம் நகராட்சி 20-வது வார்டு ரஹ்மத் நகரில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தின் எதிரே நகராட்சி பூங்கா அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. பூங்கா பணிகளுக்காக அப்பகுதியில் மக்கள் பயன்படுத்தி வந்த கழிவுநீர் வாய்க்கால் மூடப்பட்டதால், கழிவுநீர் அங்கன்வாடி மையத்தின் வாசல் முன்பு குளம் போல் தேங்கி நிற்கிறது.
இதனால் அப்பகுதியில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி வருகின்றன. அங்கன்வாடி மையத்தில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வரும் நிலையில், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு, மலேரியா போன்ற பல்வேறு நோய்த்தொற்றுகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக டெங்கு காய்ச்சல் பரவும் அச்சம் அப்பகுதி மக்களிடையே நிலவுகிறது.
எனவே, நகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றவும், கொசு உற்பத்தியை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் அப்பகுதியை பார்வையிட்டு உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த சுகாதார சீர்கேடு உடனடியாக சரி செய்யப்படாவிட்டால், குழந்தைகளின் உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகும் என அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.