கோட்டக்குப்பம் நகராட்சி அலுவலகம் எதிரில், ஆதி திராவிடர் மக்களுக்காக 1997-ம் ஆண்டு கட்டப்பட்ட 10 கடைகளைக் கொண்ட வணிக வளாகம், 28 ஆண்டுகளாக பூட்டப்பட்டு இருப்பதால், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கோட்டக்குப்பத்தில் ஆதி திராவிடர் மக்களின் மேம்பாட்டிற்காக கட்டப்பட்ட வணிக வளாக கடைகள், பல ஆண்டுகளாக பூட்டப்பட்டு உள்ளன. இந்த கடைகள் இதுவரை பயனாளிகளுக்கு வழங்கப்படவில்லை என்பதால், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கடும் கோபம் தெரிவித்தனர். திமுக மற்றும் அதிமுக ஆட்சிக் காலங்களில் பலமுறை கோரிக்கைகள் விடப்பட்டாலும், கடைகள் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று கோட்டக்குப்பம் நகராட்சி அலுவலகம் எதிரே, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வணிக வளாகத்தின் பூட்டுகளை உடைத்து திறந்ததுடன், நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.