கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட ஈசிஆர் பகுதிகளில் அடிக்கடி குப்பைகள் மர்ம நபர்களால் எரியூட்டப்படுகிறது. கோட்டக்குப்பம் மேயர் ரத்தினம் பிள்ளை மெயின் ரோடு கடைசியில் , இசிஆர் அருகில் இன்று(15/02/2025) மாலை மர்ம நபர்களால் குப்பைகள் மற்றும் மின்சாதன கழிவுகள் தீயிடப்பட்டன. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகையால் சூழப்பட்டு மக்கள் பெரும் அச்சமடைந்தனர். மேலும், அக்கம் பக்கத்தினர் தீ மேலும் பரவாமல் தடுக்க தண்ணீர் கொண்டு வந்து அந்த தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதேபோல், கடந்த திங்கட்கிழமை அன்று, சின்ன கோட்டக்குப்பம் அருகில் இசிஆர் பகுதியில் மின்சாதன கழிவுகள் எரிக்கப்பட்டன. அப்போதும் ஈசிஆர் பகுதி முழுவதும் கரும்புகைகள் சூழ்ந்து வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகினர். நகராட்சி வாகனம் மூலம் தீ அணைக்கப்பட்டது.
இந்த தொடர்ச்சியான குப்பை எரிப்பு சம்பவங்களால், காற்று மாசுபடுவதுடன், அப்பகுதி மக்கள் சுவாசக் கோளாறு நோய்கள் ஏற்படும் அச்சமும் ஏற்பட்டுள்ளது. இதே போல் சம்பவம் ஈசிஆர் பகுதிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
எனவே, நகராட்சி நிர்வாகம் ஈசிஆர் பகுதிகளில் தொடர்ந்து கண்காணித்து குப்பை மற்றும் கழிவுகளை கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதிக அபராதம் விதிக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.