எதிர்க்கட்சியினரின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்ததன் மூலம் சட்டமாக்கப்பட்டுள்ளது. ஒன்றிய பாஜக அரசால் கொண்டுவரப்பட்ட இந்த வக்பு திருத்த சட்டத்தை கண்டித்து, நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், வக்ஃப் திருத்தச் சட்டத்தை கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.
அதேபோல், விழுப்புரம் நகராட்சி திடலில் ஜமாத்துல் உலமா சபை சார்பில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணி அளவில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.
ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் கண்டன பொதுக் கூட்டத்திற்கு அனைவரும் கலந்து கொள்ளும் விதமாக, கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜிதிலிருந்து மதியம் 3 மணி அளவில் பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வக்ஃப் சொத்துக்களை பாதுகாக்கவும், முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை நிலை நாட்டவும், இந்த பொதுக்கூட்டத்தில் திரளாக கலந்து கொள்ளுமாறு ஜமாத்துல் உலமா சபை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.