தமிழக அரசின் சார்பில் அனைத்து டவுன் பஞ்சாயத்துக்கும் அந்த ஊரின் தரவுகள் அடங்கிய இணையதளம் உருவாக்கி கொடுக்கப்பட்டுள்ளது.
அதுபோலவே கோட்டகுப்பம் பேரூராட்சிக்கு கோட்டக்குப்பம் டவுன் பஞ்சாயத்து என்று இணையதளம் உருவாக்கப்பட்டு அதில், கோட்டகுப்பத்தில் உள்ள விவரங்களை தரவுகளாக பதியப்பட்டுள்ளது காணமுடிகிறது.
கோட்டகுப்பம் டவுன் பஞ்சாயத்து என்பது அனைத்து மக்களும் உள்ளடக்கிய ஜாதி, மத வேறுபாடின்றி அனைத்து மக்களுக்குமான நிர்வாகமாகவே செயல்பட்டு வந்துள்ளது.
சுமார் 30,000க்கும் மேற்பட்ட வாக்காளர் கொண்ட இந்த கோட்டக்குப்பம் பேரூராட்சியில் இந்துக்களும் முஸ்லிம்களும் சரி பாதி எண்ணிக்கையில் உள்ளது அனைவரும் அறிந்ததே.
அனைத்து இன மக்களும் ஜாதி, மத வேறுபாடின்றி இதுநாள்வரை இணக்கமாக வாழ்ந்து வருகிறோம்.
பேரூராட்சி மன்றத் தலைவராக இந்து சமுதாயத்தை சேர்ந்தவர் தேர்வு செய்யப்பட்டால் துணைத்தலைவராக இஸ்லாமியரும், இஸ்லாமியர் தலைவராக தேர்வு செய்யப்பட்டால் துணைத்தலைவர் ஹிந்துவும் தேர்வு செய்வதை ஒரு மரபாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த சூழ்நிலையில் மேற்படி இணையதளத்தில், கோட்டகுப்பம் மக்கள் தொகை மற்றும் வார்டு விபரங்கள் போன்ற பல தகவல்கள் பதியப்பட்டுள்ளது.
அதில் பதியப்பட்ட மேலும் ஒரு தகவல் என்னவென்றால் கோட்டகுப்பத்தில் உள்ள வழிபாட்டு ஆலயங்களையும் பதிவு செய்துள்ளார்கள்.
அதில் கோட்டக்குப்பம் பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் உள்ள பெரிய கோயில் முதல் சிறிய கோயில் வரை, பழைய கோயில் முதல் புதிதாக கட்டப்பட்ட கோவில் வரை பட்டியலிட்டு மேற்படி இணையதளத்தில் பதிவேற்றியுள்ளார்.
கோயில்களின் பட்டியல்களை பதிவேற்றம் செய்த பேரூராட்சியின் இணையத்தை நாம் வரவேற்கிறோம்.
ஊரில் உள்ள கோயில்களை பட்டியலிடுவது ஒரு அரசாங்கத்தின் கடமையாக நாம் கருதுகிறோம். ஆனால் அதே நேரத்தில் சரிபாதி முஸ்லிம்கள் உள்ள இந்தப் பகுதியில் 150 ஆண்டு பாரம்பரியமான இரண்டு பள்ளிவாசல் உள்ளது. அந்த இரண்டு பள்ளிவாசல்களும் தமிழ்நாடு வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்டு அதற்கான சகாய தொகைகளை வருடாவருடம் அரசுக்கு சரியாக கணக்கிட்டு கட்டி வருகிறார்கள். இதுமட்டுமல்லாமல் ஊரின் வளர்ச்சியைக் கருதி ஊரில் உருவான புறநகர் பகுதிகளை கருத்தில் கொண்டு கடந்த 50 ஆண்டுகளில் ஊரின் 18 வார்டுகளில் உள்ளடக்கிய பகுதிகளில் 11 சுன்னத் வல் ஜமாத்துக்கு உட்பட்ட பள்ளிவாசல்களும் 2 தவ்ஹீத் ஜமாத்திற்கு உட்பட்ட பள்ளிவாசல்களும் செயல்பட்டு வருகிறது. இந்த விவரங்களை அந்த இணையதளத்தில் பதிவிடாமல் போனது ஏன்?
சமீபத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட கோவில்களை பதிவிட்டு அவர்கள் கடந்த 150 ஆண்டு காலமாக இருந்துகொண்டிருக்கும் பள்ளிவாசல்களையும் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பள்ளிவாசல்களின் பட்டியல்களை அதில் என் பதிவிடவில்லை.
தரவுகளைத் தொகுத்தவர்களுக்கு இந்தப் பள்ளிவாசல்கள் தெரியவில்லையா? அல்லது வேண்டுமென்றே விடப்பட்டு விட்டதா?
டிசம்பர் 6-ஆம் தேதி வந்துவிட்டால், அனைத்து பள்ளிவாசல்களிலும் காவல் துறையால் கண்காணிக்கப்படுகிறது. எத்தனை பள்ளிவாசல் என்று அப்போது அவர்களுக்குத் தெரிகிறது. பாபரி மஸ்ஜித் தீர்ப்பின் நாளிற்கு பிறகு சுமார் இரண்டு வாரங்கள் அனைத்து பள்ளிவாசல்களிலும் காவல் காத்து நின்ற அதிகாரிகளுக்கு தெரிகிறது எத்தனை பள்ளிவாசல் என்று!
அதேபோன்று நெருக்கடியான நேரங்களில் எல்லாம் பள்ளிகளை சுற்றி நின்று பாதுகாத்த போது பள்ளிகளின் எண்ணிக்கை தெரிந்த அதிகாரிகளுக்கு இணைய தளத்தில் பதிவிடும் பொழுது கோட்டக்ககுப்பத்தில் இயங்கிவரும் பள்ளிவாசல்கள் பதிவிடப்படாததின் நோக்கம் என்ன?
நெருக்கடியான நேரத்தில் பள்ளிவாசல் கண்காணித்த அரசு, ஒரு அரசு இணைய தளத்தில் பள்ளிவாசலை பதிவிடாமல் போனதில் உள்நோக்கம் என்ன?
தற்பொழுதைய 144 தடை உத்தரவில் ஏதேனும் பள்ளிவாசல்கள் இயங்குகின்றன என்று கடுமையாக கண்காணிக்கும் அதிகாரிகளுக்கு மேற்படி பள்ளிவாசலின் கணக்கை இணையதளத்தில் பதிவிடாமல் போனது நோக்கம் என்ன?
அனைத்து சமூகத்திற்கான ஒரு அரசும், ஒரு உள்ளூர் அரசு நிர்வாகமும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் வழிபாட்டுத் தளங்களை பதிவேற்றம் செய்யப்படாதது இயல்பாக நடந்த தவறா? அல்லது வேண்டுமென்றே செய்யப்பட்ட தவறா? என்பதை சம்மந்தப்பட்டவர்கள் மக்களுக்கு விளக்க வேண்டும். அவ்வாறு உங்களுக்கு அந்த தரவுகள் தெரியவில்லை என்றால் சம்பந்தப்பட்ட ஊர் ஜமாத்தார்கள் அணுகி அதன் விபரங்களை கேட்டு அந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இங்கு பள்ளிவாசல்களை மட்டும் விடப்பட்டதாக கருதவில்லை ஊரில் இருக்கும் அனைத்து சமூக வழிபாட்டுத் தளங்களின் விவரங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பதே நமது நோக்கம். விடுபட்டுள்ள அந்த அனைத்து சமூக வழிபாட்டுத் தளங்களையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டுமென்று கோட்டகுப்பம் பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
விழுப்புரம் மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பகுதியாக வசிக்கும் கோட்டக்குப்பத்தை அரசின் கவனத்திலிருந்து திசை திருப்பும் முயற்சியா?
இதில் துரதிஷ்டவசமான செய்தி என்னவென்றால், முஸ்லிம் பகுதிகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் கூட இந்த செய்திகள் கவனத்திற்கு வராமல் போனதுதான். இது சம்பந்தமாக அந்த உறுப்பினர்கள் எவரும் இதுவரையில் எந்தவித கேள்வியும் கேட்கவில்லை என்பதும் அதிர்ச்சிக்கு உரியது.
கோட்டக்குப்பம் பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதியிலும், அனைத்து மக்களும், இதுவரை சகோதர பாசத்துடன் பழகி வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கிடைய எந்தவித மனக்கசப்பும் வந்து விடக் கூடாது என்ற கவலையின் வெளிபாடே இந்த பதிவு.
அனைவருக்குமான அரசு என்று சொல்பவர்கள் அனைத்து சமூக மக்களையும் சமமாக பாவிக்க வேண்டும்.
1 comment
இணையதளத்தில் ஏதேனும் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.