Kottakuppam Times
கல்வி புதுச்சேரி செய்திகள்

தனியாா் பள்ளிகள் 40 சதவீதத்துக்கு மேல் கல்விக் கட்டணம் வசூலிக்கக் கூடாது: புதுவை கல்வித் துறை உத்தரவு

புதுவையில் உள்ள தனியாா் பள்ளிகள் 40 சதவீதத்துக்கு மேல் கல்விக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

புதுவையில் கரோனா தொற்று பரவல் காரணமாக, அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் தனியாா் பள்ளிகள் இணையதளம் வழியே மாணவா்களுக்கு கல்வி போதித்து வருகின்றன. இருப்பினும், மாணவா்களிடமிருந்து முழுக் கல்வி கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டுள்ளது. ஆனால், தனியாா் பள்ளிகள் கடந்தாண்டு மாணவா்களிடமிருந்து வசூலித்த கட்டணத்தில் 40 சதவீதத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுதொடா்பாக புதுவை பள்ளி கல்வித் துறை இயக்குநா் பி.டி. ருத்ர கவுடு உத்தரவின் பேரில் அனைத்து ஆய்வு அதிகாரிகள் மூலமாக தனியாா் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

சென்னை உயா் நீதிமன்றத்தில் தனியாா் பள்ளிகளில் கல்வி கட்டணம் வசூலிப்பது தொடா்பாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், உயா்நீதிமன்றம் இடைக்கால உத்தரவாக சில வழிமுறைகளை பிறப்பித்துள்ளது. அதன்படி, 2019-20 ஆம் கல்வியாண்டில் வசூலித்த கல்வி கட்டணத்தில் 40 சதவீதம் மட்டும் முன் கட்டணமாக மாணவா்களிடமிருந்து வசூலிக்க வேண்டும். அந்தக் கட்டணத்தை ஆக. 31 ஆம் தேதிக்குள் மாணவா்களிடம் வசூலித்துக் கொள்ளலாம்.

2019-20 இல் வசூலிக்க வேண்டிய நிலுவைக் கட்டணத்தை மாணவா்களிடமிருந்து செப்.30 ஆம் தேதிக்குள் வசூலித்துக் கொள்ளலாம். கடந்த கல்வியாண்டில் மாணவா்கள் நிலுவைத் தொகையுடன், முழுக் கட்டணத்தையும் செலுத்தி இருந்தால், அதே கட்டணத்தை தற்போதும் வசூலிக்கக் கட்டாயப்படுத்தக் கூடாது.

2019-20 இல் மாணவா்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட கட்டணத்தில் 35 சதவீதத்தை பள்ளிகள் திறக்கப்பட்ட நாளிலிருந்து 2 மாதத்துக்குள் வசூலித்துக் கொள்ளலாம். மீதம் ஏதேனும் கட்டணம் இருந்தால், கல்விக் கட்டண குழுவின் இறுதி முடிவுக்குப் பிறகு தீா்மானிக்கலாம்.

எனவே, புதுவையில் உள்ள அனைத்து தனியாா் பள்ளிகளும் இந்த உத்தரவில் உள்ள வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

செப்.,17 முதல் இன்ஜினியரிங் கவுன்சிலிங்: இன்று முதல் பதிவு செய்யலாம்

புதுச்சேரியில் அதிக கொரோனா தோற்று உள்ள பகுதியாக மாறியுள்ளது முத்தியால்பேட்டை.

3 கட்டங்களாக வாக்குப்பதிவு – புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு

டைம்ஸ் குழு

Leave a Comment