கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் கோட்டக்குப்பம் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தொடர் திருட்டு நடைபெற்றது. இதில், சின்னபட்டானூரில் உள்ள முருகையன் வீட்டில் 6 கிராம் நகை திருடப்பட்டது. ஆரோபுட் கணபதி நகரில் உள்ள பாலசந்திரன் வீட்டில் 3 பவுன் நகை, எறையானூரில் உள்ள அப்துல் அஜீஸ் வீட்டில் 9 பவுன் நகை திருடப்பட்டது. ஆரோவில் அருகே உள்ள எஸ்பிபி நகரில் வசிக்கும் அனிசோமன் வீட்டில் 2.4 பவுன் நகை திருடப்பட்டது.
திருச்சிற்றம்பலத்தில் வசிக்கும் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் மூன்றரை பவுன் நகை, திருச்சிற்றம்பலம் கிருஷ்ணாநகரில் வசிக்கும் சசிகுமார் வீட்டில் 39 பவுன் நகை திருடப்பட்டது. ஆரோவில் திருநகரில் வசிக்கும் நாச்சிமுத்து வீட்டில் எட்டரை பவுன் நகை என மொத்தம் 51.4 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக ஆரோவில், வானூர், கிளியனூர் காவல்நிலையங்களில் தனித்தனி புகார்கள் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ், சப்- இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், புதுச்சேரி கரிக்கலாம்பாக்கத்தைச் சேர்ந்த ரவிகுமார் என்ற பாலகிருஷ்ணன்(47),வேலூர் கருகம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்ற ஆறுமுகம்(55) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். இருவரும் கர்நாடக மாநிலம் மைசூர், மாண்டியா பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 55 பவுன் நகைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இருவரையும் கைது செய்து நகைகளை பறிமுதல் செய்த போலீஸாருக்கு விழுப்புரம் எஸ்பி ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்தார்.
நன்றி – ஹிந்து தமிழ்.