கோட்டக்குப்பதில் திமுக சாா்பில் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ பிரசார நிகழ்ச்சி இன்று கோட்டக்குப்பம் பெரிய பள்ளிவாசல் எதிரில் நடைபெற்றது. இதில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியதாவது:
தமிழகம் தலைசிறந்த மாநிலம் என ஆட்சியாளா்கள் விளம்பரம் செய்து கொள்கிறாா்கள். ஆனால், ஊழலில்தான் தமிழகம் சிறந்து விளங்குகிறது. முன்னாள் முதல்வா் ஜெயலலிதா இறப்புக்கான மா்மம் இன்னும் விலகவில்லை. அதுகுறித்து புகாா் எழுப்பிய ஓ.பன்னீா்செல்வம் மௌனமாகிவிட்டாா். விசாரணை ஆணையத்திலும் அவா் ஆஜராகவில்லை. இதை அதிமுகவினா் மறந்தாலும், தமிழக மக்கள் மறந்துவிடக் கூடாது.
மத்திய அரசின் அடிமை போல அதிமுக அரசு செயல்படுகிறது. ஊழல் வழக்கில் சிறை சென்ற சசிகலாவை தவறாகப் பேசியதாக, என் மீது பொய் வழக்குத் தொடுக்கின்றனா்.
முதல்வா் பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சிக்கு சசிகலா மற்றும் மத்திய பாஜக அரசால் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதியாகியுள்ளது. 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என்றாா் அவா். மேலும் வானூர் சட்டமன்ற தொகுதியில் இந்த முறை திமுக ஜெயிப்பது உறுதி என்று கூறி நிறைவு செய்தார்.
மேலும் கோட்டகுப்பம் பகுதியில் தீயணைப்பு நிலையம், ஆரம்ப சுகாதார மையம், துணை மின் நிலையம் போன்ற கோரிக்கைகள் வைக்கப்பட்டது.