விழுப்புரம் மாவட்டத்தில் முகக் கவசம் அணியாதவா்களுக்கு காவல் துறை மூலம் ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. கடந்த 4 நாள்களில் மட்டும் ரூ.5.36 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
கரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் பொது இடங்களில் பொதுமக்கள் முகக் கவசம் அணியாவிட்டால் ரூ.200-ம் சமூக இடைவெளியைப் பின்பற்றாவிட்டால் ரூ.500-ம் பொது இடத்தில் எச்சில் துப்பினால் ரூ.500-ம் அபராதமாக விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டு வருகிறது.
இதற்காக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 30 காவல் நிலையங்களுக்கு 300 அபராத ரசீது புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மாவட்டம் முழுவதும் கடந்த 8 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை முகக் கவசம் அணியாமல் வந்த 2,681 பேருக்கு ரூ.200 வீதமும், சமூக இடைவெளியைப் பின்பற்றாத 45 பேருக்கு ரூ.500 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதன் மூலம் கடந்த 4 நாள்களில் மட்டும் ரூ.5 லட்சத்து 36 ஆயிரத்து 200 வரை அபராதம் வசூலிக்கப்பட்டது. இதில், விழுப்புரம் காவல் உள்கோட்டத்தில் அதிகபட்சமாக ரூ. 2 லட்சத்து 5 ஆயிரமும், திண்டிவனம் காவல் உள்கோட்டத்தில் ரூ.1 லட்சத்து 29 ஆயிரத்து 400-ம், செஞ்சி காவல் உள்கோட்டத்தில் ரூ.75 ஆயிரத்து 200-ம், கோட்டக்குப்பம் காவல் உள்கோட்டத்தில் ரூ.1 லட்சத்து 26 ஆயிரத்து 600-ம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
மேலும், சமூக இடைவெளியை பின்பற்ற நபா்களிடமிருந்து கடந்த 4 நாள்களில் ரூ.22,500 வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதில், விழுப்புரம் உள்கோட்டத்தில் ரூ.10,500-ம், திண்டிவனம் உள்கோட்டத்தில் ரூ.1,500-ம், செஞ்சி உள்கோட்டத்தில் ரூ.1,500-ம், கோட்டக்குப்பம் உள்கோட்டத்தில் ரூ.9ஆயிரமும் காவல் துறை மூலம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் கரோனா விதிமீறலில் ஈடுபட்ட 2,726 நபா்களிடமிருந்து மொத்தம் ரூ.5,58,700 அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.