தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு அறிவித்துள்ள இரவு நேர ஊரடங்கு மற்றும் புதிய கட்டுப்பாடு இன்று முதல் அமலுக்கு வருகிறது.
கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, தமிழகத்தில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு இன்று அமலுக்கு வருகிறது.
அதன்படி இரவு நேரங்களில் தனியார் மற்றும் அரசுப் பேருந்துகள் இயங்காது. வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்துகள் பகல் நேரத்தில் மட்டுமே இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடற்கரைகள், பூங்காக்கள், வனவிலங்கு பூங்காக்கள் உள்ளிட்டவை மூடப்பட்டு பொதுமக்கள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் கடும் கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓட்டல்கள், டீக்கடைகள், காய்கறி கடைகள், பலசரக்கு கடைகள் உட்பட அனைத்து கடைகள், வணிக வளாகங்கள், ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இரவு 9 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். திருமண நிகழ்ச்சிகளில் 100 பேருக்கு மிகாமல் கலந்து கொள்ளவும், தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்களும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகளுக்கு தடையில்லை என்றும், பெட்ரோல்- டீசல் பங்க்குகள் வழக்கம்போல் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இரவுநேர ஊரடங்கு முழுமையாக அமல்படுத்தப்படுவதை உறுதி செய்ய போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபடுவார்கள். மார்க்கெட்டுகள்,பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள்,வழிபாட்டுத தலங்கள் உள்ளிட்ட முக்கியமான பகுதிகளில் தற்காலிகச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு!
மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும். அன்றைய தினம் இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட், காய்கறி கடைகள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள் மற்றும் அனைத்து கடைகள் செயல்பட அனுமதி கிடையாது. மீறினால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.