30 நாள் நோன்பிருந்து மிகுந்த ஆர்வத்தோடு பெருநாளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அனைத்து பகுதி முஸ்லிம் மக்களைப் போலவே கோட்டக்குப்பம் மக்களும் மிகுந்த உற்சாகத்தோடு பெருநாளை கொண்டாடுவார்கள்.
சென்ற வருடங்களைப் போல், இந்த வருடமும் முழு ஊரடங்கால் முழு ரமலான் மாதமும் மூழ்கிப் போய் பெருநாள் தினம் கவலையையும் உற்சாகமின்மையையும் ஏற்படுத்தி கடந்துவிட்டது.
பெருநாள் அறிவிக்கப்படும் முதல் நாள் இரவு 7 மணி தொடங்கிய உற்சாகம் பெருநாள் தினம் அன்று இரவு 10 மணி வரை கோட்டக்குப்பம் அனைத்துப் பகுதியும் பரபரப்பாக காணப்படும்.
பெருநாள் இரவு அன்று பெருநாள் தினத்திற்கு பொருட்களை வாங்க மக்கள் அங்கும் இங்குமாக ஓடிக் கொண்டிருப்பதும், இறைச்சி வாங்கவும், உணவு தயாரிக்கவும் தேவையான பொருட்களை வாங்கவும், கடைசிநேர ஆயத்த புத்தாடைகள் வாங்கவும் மக்கள் மிகவும் பரபரப்பாக காணப்படுவார்கள்.
அதிகாலைத் தொழுகை முடிந்தவுடன் பெருநாள் சிறப்பு தொழுகைக்கு தயாராகி பெருநாள் தொழுகை மைதான நோக்கி செல்வதும், தொழுதுவிட்டு அனைவரும் கூட்டமாக திரும்பி வருவதும், வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வதும். அதன் பிறகு தன்னுடைய நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு பெருநாள் உணவு வகைகளை பரிமாறிக் கொள்வதும், அதனை தொடர்ந்து மாலை நேரம் கூடும் பெருநாள் சிறப்பு சந்தைக்கு தாய்மார்களும், இளம் பெண்களும் உற்சாகத்தோடு படையெடுத்துச் செல்வது, பெருநாள் சந்தைக்கு தன் மனைவியை, தன் குழந்தையை, தன் உறவினரை இருசக்கர வாகனங்களில் ஏற்றிக்கொண்டு கோட்டக்குப்பத்தில் அனைத்து தெருக்களிலும் உற்சாகமாக வலம் வருவதும்,
மேலும் இளைஞர்களின் அரட்டை பட்டாளமும் இவ்வாறாக இரு தினங்களும் மிகுந்த பரபரப்பாகக் காணப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மேற்சொன்ன எந்த செய்கையும் வழக்கமான மிகுந்த உற்சாகத்தோடு நடக்காமல் இயந்திரத்தனமாக மிகவும் அமைதியாக நடந்தது.
கடந்த இரு வருடங்களாக வழக்கமான பெருநாளாக அமையவில்லை என்று மக்கள் ஆதங்கப் பட்டதும், மேலும் தொழுகையை பள்ளிகளில் நிறைவேற்ற முடியாமல் போலீசின் கெடுபிடிகளை பற்றிய மிகுந்த கவலையோடு பேசிக்கொண்டது, அனைவர் மனதிலும் பெரும் மன வருத்தத்தையும், கவலையை ஏற்படுத்தி கடந்துவிட்டது.
இந்த கொரானா நோய் தொற்று நெருக்கடி காலம் விரைவில் முடிவுக்கு வந்து. வரும் நாட்களில் பழைய உற்சாகத்துடன் அனைத்து பண்டிகைகளையும் கொண்டாடும் சூழ்நிலையை இயற்கையும் இறைவனும் ஏற்படுத்தித் தருவானாக…
மக்களின் உணர்வுடன்,
கோட்டக்குப்பம் டைம்ஸ்.