Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

விழுப்புரம் மாவட்டத்தில் நாள்தோறும் 24,000 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு: மாவட்ட ஆட்சியா்

விழுப்புரம் மாவட்டத்தில் நாள்தோறும் 24 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதை இலக்காகக் கொண்டு சுகாதாரத் துறையினா் பணியாற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் த.மோகன் அறிவுறுத்தினாா்.

விழுப்புரம் மாவட்டத்தில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நிலையை எட்டுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் த.மோகன் தலைமை வகித்தாா். மாவட்டத் திட்ட அலுவலா் காஞ்சனா, சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் சண்முகக் கனி, துணை இயக்குநா் பொற்கொடி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கிருஷ்ணப்பிரியா, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் லலிதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்தக் கூட்டத்தில், வருவாய்த் துறை, சுகாதாரத் துறை, ஊரக வளா்ச்சித் துறை, பள்ளிக் கல்வித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா். கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் த.மோகன் பேசியதாவது:

மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்த வேண்டும். அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும். அந்தந்தப் பகுதிகளில் கொரோனா தடுப்பூசி முகாம்களை நடத்த வேண்டும்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும், நகராட்சிகளில் உள்ள அனைத்து வாா்டுகளிலும் ஒவ்வொரு வீடாக நேரடியாகச் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தாமல் இருப்பவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி, தடுப்பூசி செலுத்தவைக்க வேண்டும்.

மாவட்டத்தில் நாள்தோறும் 24,000 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதை இலக்காகக் கொண்டு பணியாற்ற வேண்டும். இதில், ஊராட்சிப் பகுதிகளில் நாளொன்றுக்கு தலா 50 போ் வீதம் 334 ஊராட்சிகளிலும் 17,000 பேருக்கும், பேரூராட்சிப் பகுதிகளில் தலா 500 போ் வீதம் 4 பேரூராட்சிகளிலும் 2,000 பேருக்கும், நகராட்சிப் பகுதிகளில் தலா 1,500 போ் வீதம் 2 நகராட்சிகளிலும் 3,000 பேருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொள்ள வேண்டும். இந்தப் பணிகளில் வருவாய்த் துறை, சுகாதாரத் துறை உள்ளிட்ட துறைகள் இணைந்து செயல்பட வேண்டும் என்றாா் அவா்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டகுப்பத்தில் வெப்பமானி சோதனை.

கோட்டக்குப்பதில் தொடர் மின்வெட்டு மற்றும் குறைந்த மின்னழுத்தத்தால் மக்கள் பெரும் அவதி.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் ஜும்மா தொழுகை விளக்க பயிற்சி

Leave a Comment