விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் மகாத்மாகாந்தி சாலையில் பிரசித்தி பெற்ற சுகந்தர மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கோட்டக்குப்பம் எம்.ஜி.சாலையை சேர்ந்த சங்கரநாராயணன் (வயது 53) என்பவர் பூசாரியாக உள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு பூஜைகள் முடிந்ததும் வழக்கம்போல் கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று காலை கோவிலை திறந்து பூஜைகள் செய்வதற்காக வந்தபோது கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
இதைக்கண்டு திடுக்கிட்ட அவர், கோவிலுக்குள் சென்று பார்த்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பக்தர்களின் காணிக்கை பணம் கொள்ளை போயிருந்தது. மேலும் கோவிலில் இருந்த 1½ அடி உயர வெள்ளி வேல், சந்தன கிண்ணம், கவசம், பன்னீர் சொம்பு உள்ளிட்ட பொருட்களும் கொள்ளை போனதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.
நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள், கோவில் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து உண்டியல் பணம் சுமார் ரூ.10 ஆயிரம் ரொக்கம் மற்றும் மேற்கண்ட பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது. கொள்ளைபோன பணம் மற்றும் பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.50 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில் கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கோட்டக்குப்பம் போலீஸ் நிலையத்தில் இருந்து சற்று தொலைவிலேயே உள்ள இந்த கோவிலில் நடந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
– நன்றி மாலைமலர்