குடிநீர் வினியோகம் சரியில்லை என்று அனைத்து தரப்பு பொதுமக்களின், புகாரின் எதிரொலியாக பெரிய தெரு, காஜியார் தெரு போன்ற பகுதிகளில் புதிய 4-இன்ச் மெயின் பைப் மேற்படி பகுதிகளில் புதைக்கப்பட்டது. புதைக்கப்பட்ட மெயின் குழாயிலிருந்து வீடுகளுக்கு இணைப்பு கொடுக்க வேண்டியது பேரூராட்சி நிர்வாகத்தின் கடமை. ஆனால், மறு இணைப்பை வீடுகளுக்கு கொடுக்கும் முன்னரே ரோடு சரி செய்யும் பணி அதாவது பேட்ச் ஒர்க் செய்யும் பணி காஜியார் தெருவில் நடைபெற்றது. இதனால், அப்பகுதி மக்கள் பெரும் விரக்தி அடைந்து அங்கிருக்கும் ஊழியர்களிடம் முறையிட்டனர். அதன் பிறகு, ஒரு சில வீடுகளுக்கு மட்டும் குடிநீர் மறு இணைப்பு அவசர அவசரமாக கொடுக்கப்பட்டு பேட்ச் வொர்க்(Patch work) முடிக்கப்பட்டது. இது சம்பந்தமாக கோட்டகுப்பம் பேரூராட்சி சார்பில் முறையான அறிவிப்பு செய்யப்படவில்லை என்பதும் மற்றும் சரியான திட்டமிடுதல் இல்லாததே என அப்பகுதி மக்களின் குற்றச்சாட்டாக கூறப்படுகிறது.
ஏற்கனவே முறையான கட்டணம் செலுத்தி குடிநீர் இணைப்பு பெற்று பயன்படுத்தி வந்த பயனாளிகளின் இல்லங்களில் குடிநீர் வினியோகம் சரியில்லை என்று தான் புகார் தெரிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையிலேயே புதிய குழாய்கள் பேரூராட்சி மன்றத்தின் மூலம் பதிக்கப்பட்டது. பதிக்கப்பட்ட குழாய்களில் ஏற்கனவே குடிநீர் இணைப்பு பெற்றவர்களுக்கு தானாகவே குடிநீர் இணைப்பு கொடுக்க வேண்டியது பேரூராட்சி மன்றத்தின் கடமையாகும். ஆனால் பதிக்கப்பட்ட புதிய பைப்பிலிருந்து ஏற்கனவே குடிநீர் இணைப்பு பெற்றவர்களுக்கு மீண்டும் மறு இணைப்பு கொடுக்க கட்டணம் செலுத்த வேண்டும் என்று சொல்வது அனைத்து தரப்பு மக்களும் எதிர்க்கிறார்கள். அதாவது குடிநீர் மறு இணைப்பு பெற,
- பழைய குடிநீர் பாக்கி அனைத்தையும் செலுத்தப்பட்டு இருக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல், அடுத்த ஆண்டு மார்ச் 31, 2022 வரை குடிநீர் கட்டணம் அட்வான்ஸாக செலுத்தியிருக்க வேண்டும்.
- வீட்டு வரி 2021-22 வரை செலுத்தியிருக்க வேண்டும்.
- குடிநீர் மறு இணைப்பிற்கு ரூபாய் 700 செலுத்தி ரசித்து பெற்றுயிருக்கவேண்டும்.
இது மட்டுமல்லாமல், குடிநீர் இணைப்பு கொடுக்க வரும் நிர்வாகிகள் 1000 முதல் 1500 வரை ரசீது இல்லாமல் வசூலிக்கின்றனர்.
நேற்று, பெரிய தெரு பகுதியில் மறு இணைப்புக்காக இரண்டு வீடுகளுக்கு பல்லம் எடுக்கப்பட்டது. குடிநீர் மறு இணைப்பிற்காக பொருட்கள் அனைத்தும் வீட்டு உரிமையாளர் வாங்கி வந்து கொடுத்துள்ளார். அங்கு வந்த ஊழியர் ஒருவர் “ஏம்பா காசு வாங்கி விட்டீர்களா” என்று கேட்டார். அதற்கு வீட்டின் உரிமையாளர், எதற்கு கட்டணம் செலுத்த வேண்டும், ஏற்கனவே மறு இணைப்பிற்கு பணம் கட்டி ரசீது வைத்துள்ளேன், இப்போது கேட்கும் தொகைக்கு ரசீது தருவீர்களா என கேட்க, அதற்கு அந்த ஊழியர் “ஏம்பா பள்ளத்தை மூடிட்டு வாங்கப்பா நம்ம போகலாம்” என சொல்லி, எடுத்த பள்ளத்தை அடாவடித்தனமா மூடிவிட்டு செற்றுவிட்டனர். இந்த சம்பவம் குறித்து, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது.
எங்களுக்கு குடிநீர் சரியாக விநியோகம் இல்லை என்றுதான் புகார் அளித்தோம். அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியது பேரூராட்சி மன்றத்தின் கடமையாகும். ஆனால் அதற்கான செலவை அனைத்தையும் எங்களிடமே வசூலிப்பது என்பதே ஏற்றுக்கொள்ள முடியாது. தனி ஒரு வீட்டிற்காக வேலை செய்தால் அவரிடமிருந்து கட்டணம் வசூலித்துக் கொள்வதற்கு அனுமதி உண்டு. ஆனால் ஒரு ஊருக்கே, ஒரு தெருவுக்கே மறு இணைப்பு கொடுக்கும் போது அதற்கான செலவை அனைத்தையும், கூலியையும் இந்த கொரோனா பெருந்தொற்றில் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து வாடும் இந்த நேரத்தில் பொதுமக்களிடமிருந்து கேட்பது சரியான நடவடிக்கை இல்லை என்று அப்பகுதி மக்கள் மிகுந்த வருத்தத்தில் தெரிவித்துள்ளனர்.
ஆகவே, மக்களின் இந்த உணர்வை புரிந்து கொண்டு புதிதாக பதிக்கப்பட்ட குழாயிலிருந்து கட்டணம் ஏதும் இல்லாமல், ஏற்கனவே குடிநீர் இணைப்பு பெற்ற அனைவருக்கும் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
புதிதாக யாரேனும் குடிநீர் இணைப்பு கேட்டால், அவர்களிடம் இருந்து பேரூராட்சி மன்றம் விதிக்கும் அனைத்து கட்டணம் வசூலித்துக் கொள்ளலாம். ஆனால் ஏற்கனவே குடிநீர் இணைப்பு பெற்றவர்களிடமிருந்து மீண்டும் கட்டணம் வசூலிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
தற்பொழுது பொறுப்பேற்றிருக்கும் புதிய அரசு அனைத்து துறையிலும் சிறப்பாக செயல்பட்டு பொதுமக்களின் பாராட்டையும், ஆதரவையும் பெற்று வரும் நிலையில் இதுபோன்ற செய்கையால் அரசுக்கு கலங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதாகவே பொது மக்கள் கருதுகிறார்கள்.
எனவே, பொது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றி தரவேண்டும் என்பது அப்பகுதிமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.