‛‛புதுச்சேரியில் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயம். கொரோனாவை தடுக்கும் வகையில் கட்டாய தடுப்பூசி சட்டம் உடனடியாக அமல்படுத்தப்படுகிறது,” என, சுகாதார துறை இயக்குனர் ஸ்ரீராமலு அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: கொரோனா நோய் தொற்று குறைந்துள்ளதை தொடர்ந்து புதுச்சேரியில் ஊரடங்கில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. நோய் தொற்றை தடுக்கவும் 100 சதவித தடுப்பூசி போட்ட யூனியன் பிரதேசமாக மாற்ற அரசு பல்வேறு முகாம்களை நடத்தி நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் பயனாக முதல் தவணை ஊசியை 7 லட்சத்து,70 ஆயிரம் பேரும் இரண்டாவது தவணை ஊசியை 4லட்சத்து, 48ஆயிரம் பேரும் செலுத்தி கொண்டுள்ளனர்.
புதுச்சேரியில் 77 சதவீதத்தினர் தடுப்பூசி போட்டுள்ள நிலையில் விடுபட்டவர்கள் சிறப்பு முகாம்களில் தடுப்பூசி செலுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும் சிலர் முன்வராத காரணத்தினால் கட்டாயம் கொரோனா தடுப்பூசி சட்டம் புதுச்சேரியில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரி பொது சுகாதார சட்டம் 1973ன் பிரிவு 54(1)விதியின் கீழ் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். இரண்டு தவணை தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு வரக்கூடாது. மீறி வெளியே நடமாடினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.