கோட்டக்குப்பம் பகுதியில் தொடர் மின்வெட்டு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. ஒரு நாளைக்கு பல முறை தடை செய்யப்படும் மின்சாரத்தால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். குறிப்பாக, அதிகாலை நோன்பு நோற்கும் நேரங்களில் மின்வெட்டு அதிகமாக உள்ளது என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கடந்த திங்கட்கிழமை, அதிகாலையில் மழை பெய்த நிலையில், மின்சாரம் தடை செய்யப்பட்டது. அதேபோல், கடந்த 3 நாட்களாக மழை இல்லாவிட்டாலும் அதிகாலையில் மின்சாரம் தொடர்ந்து தடை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு என்ன உரிய காரணம் என்று தெரியவில்லை? காரணம் என்ன இருந்தாலும், தினம் தினம் அதிகாலை மின்சாரம் தடையால் பொதுமக்கள் கடும் அவதியடைந்திருப்பதாக தெரிவிக்கின்றனர்.
மேலும், அதிகாலை நேரங்களில் மின் வினியோகம் இல்லாததால் குடிநீரும் தடை செய்யப்படுகிறது, இதனால் நோன்பாளிகள் மேலும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
திடீர் மின்சாரம் தடை ஆவதும், மீண்டும் மின்சாரம் வருவதும் தொடர் நிகழ்வாகி வருவதால் வீட்டில் உள்ள மின்சாதன பொருட்கள் டி.வி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், மின்விசிறி போன்ற அத்தியாவசிய எலக்ட்ரானிக் பொருட்கள் பாதிப்படைவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
ஆகவே, கோட்டக்குப்பத்தில் ஏற்படும் தொடர் மின்வெட்டுக்கான காரணத்தை ஆராய்ந்து, நமது பகுதிக்கு வரவேண்டிய துணை மின்நிலையத்தை உடனே அமைக்க வேண்டும் என அரசுக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.