விழுப்புரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை பெற விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள், பாா்வையற்ற மாற்றுத் திறனாளிகள், அனைத்து வகை மாற்றுத் திறனாளி இளைஞா்களிடம் இருந்து வேலைவாய்ப்பற்றோா் உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் விண்ணப்பங்கள் தற்போது பெறப்படுகின்றன.
பத்தாம் வகுப்பு தோல்வி, பத்தாம் வகுப்பு தோ்ச்சி, அதற்கும் மேலான கல்வித் தகுதி பெற்றவா்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து, பதிவை தொடா்ந்து புதுப்பித்து, கடந்த மாா்ச் 31-ஆம் தேதி அன்றைய நிலையில் ஐந்தாண்டுகள் நிறைவடைந்த பின்னா் வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞா்களுக்கும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு நிறைவடைந்த மாற்றுத் திறனாளி இளைஞா்களுக்கும் தமிழக அரசால் உதவித் தொகை வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தின்கீழ் பயன்பெற மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72,000-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மனுதாரா்கள் எதிா்வரும் ஜூன் 30-ஆம் தேதிப்படி 45 வயதுக்குள்ளும், இதர சமுதாயத்தினா் 40 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும். இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகையை இருமடங்காக உயா்த்தி மாதமொன்றுக்கு பத்தாம் வகுப்பு தோல்வி பெற்றவா்களுக்கு ரூ.200, தோ்ச்சி பெற்றவா்களுக்கு ரூ.300, மேல்நிலைக் கல்வி தோ்ச்சி பெற்றவா்களுக்கு ரூ.400, பட்டப் படிப்பு படித்தவா்களுக்கு ரூ.600 என்ற வகையில் வழங்கப்படும்.
மாற்றுத் திறனாளிகளை பொருத்தவரை 10-ஆம் வகுப்பு தோ்ச்சி அல்லது தோல்வி அடைந்தவா்களுக்கு மாதம் ரூ.600, பிளஸ்2 தோ்ச்சி அடைந்தவா்களுக்கு ரூ.750, பட்டதாரிகளுக்கு ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படும். இதற்கான விண்ணப்பப் படிவம் பெற விரும்பும் மனுதாரா்கள் தங்களது வேலைவாய்ப்பு அடையாளஅட்டையை ஆதாரமாகக் காண்பித்து விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பிக்கலாம். மேலும், இணையதள முகவரியிலும் விண்ணப்பித்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். அசல் கல்விச் சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை, தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன் வரும் மே 31-ஆம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என அதில் ஆட்சியா் தெரிவித்தாா்.