23.9 C
கோட்டக்குப்பம்
November 24, 2024
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் இப்ராஹிம் கார்டன்: குப்பைகளுடன் ஒரு போராட்டம்.

இது நேற்று காலை 6: 30 மணி அளவில் எடுக்கப்பட்ட புகைப்படம்.

நமது வீட்டை சுத்தமாக வைத்திருக்கும் நாம், நமது சுற்றுச்சூழலை சுத்தமாக வைக்கவும் கடமைப்பட்டுள்ளோம். அன்றாட தினசரி குப்பைகளை நகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் சுத்தம் செய்தாலும், தெரு முனைகளிலும் மற்றும் காலி இடங்களிலும் குப்பைகள் சேர்ந்த வண்ணமே உள்ளது, முக்கியமாக கோட்டக்குப்பம் இப்ராஹிம் கார்டன் பகுதியில்.

இந்த பகுதியில், தினம் தினம் துப்புரவு பணியாளர்கள் சுத்தம் செய்தாலும் மறுநாள் காலை அதேபோல் குப்பை மேடாக காட்சி அளிக்கின்றது. இது தினசரி நடந்து கொண்டே இருக்கின்றது.

பகல் நேரங்களை விட இரவு நேரங்களில் குப்பைகள் அதிகமாக கொட்டப்படுகிறது. குறிப்பாக இருசக்கர வாகனத்தில் இரவு நேரங்களில் வந்து குப்பைகளை தெரு முனையில் வீசி விட்டு செல்கின்றனர். இதற்கு முக்கிய காரணம், தெருமுனை முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுவதே.

இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படும் கோட்டக்குப்பம் இப்ராஹிம் கார்டன் பகுதி.

மேலும், கொட்டப்பட்டுள்ள குப்பைகளை மாடுகள், நாய்கள் கிளறி விடுவதால் ரோடு முழுவதும் குப்பைகள் சிதறிக் கிடக்கின்றன, அதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும், இந்த வழியாக செல்லும் பாதசாரிகள் மூக்கை பிடித்து செல்லும் அளவிற்கு துர்நாற்றம் வீசுகின்றது.

இந்த இடத்தின் எதிரில் தான் குழந்தைகள் அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது. அங்கன்வாடி மையம் அருகே சுகாதாரமற்ற முறையில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயமும் உள்ளது.

“சாலையோரங்களில் குப்பைகள் கழிவுகள் தேவையற்ற பொருட்களை கொட்ட கூடாது, மீறினால் எவ்வித முன்னறிவிப்புமின்றி வாகனங்கள் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்படும் அதற்கான அபராத தொகையையும் வசூலிக்கப்படும்” என்ற அறிவிப்பு பேனர் இப்ராஹிம் கார்டன் தெரு முனையில் தொங்க விடப்பட்டுள்ளது. இருப்பினும், மக்கள் இதை பொருட்படுத்தாமல் அதன் கீழேயே குப்பை கழிவுகளை கொட்டி செல்கின்றனர்.

மேலும், இந்த பகுதிகளில் குப்பைகள் மட்டுமின்றி, கோழி கழிவுகள், மீன் & இறால் கழிவுகள் மற்றும் குழந்தைகள் டயப்பர் என தினமும் கொட்டப்படுகிறது, என அப்பகுதியின் துப்புரவு பணியாளர் ஒருவர் தெரிவித்தார். இந்த குப்பைகள் முழுவதும் மற்ற பகுதியில் இருந்து, இங்கு வந்து கொட்ட படுவதாக தெரிவித்தார்.

இந்தப் பிரச்சினையைத் தீர்வு தான் என்ன?

இந்தப் பகுதியில் குப்பை கொட்டுவதை தவிர்க்க தெரு முனையில் LED லைட் அமைக்கப்பட வேண்டும். இதனால் இரவு நேரங்களில் குப்பை கொட்டுவது தவிர்க்கப்படும்.

சிசிடிவி கண்காணிப்பு கேமரா அமைத்து குப்பை கொட்டுவோர் மீது அதிகாரிகள் அபராதம் விதித்து கட்டுப்படுத்த வேண்டும்.

வீடுகளில் குப்பை சேகரிக்க வரும் துப்புரவு தொழிலாளர்களிடம் குப்பைகளை ஒப்படைக்க வேண்டும். குப்பைகளை சேகரிக்க தொழிலாளர்கள் வருகையில் பிரச்சனைகள் இருந்தால் தங்கள் பகுதியில் உள்ள கவுன்சிலரிடம் உங்கள் பிரச்சனையை எடுத்துரைக்கலாம்.

திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து தர வேண்டியது உபயோகிப்பாளரின் கடமையாகும். எனவே பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உருவாகும் குப்பைகள் மற்றும் கழிவுகளை உரியவாறு மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து நகராட்சி தூய்மை பணியாளர்களிடம் தனித்தனியாக ஒப்படைத்தால் இன்னும் கூடுதல் சிறப்பு.

இறுதியாக, சுற்றுச்சூழலை காக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. இது தொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே அரசு ஏற்படுத்த வேண்டும். பொதுமக்கள் தெருமுனைகளில் அல்லது காலி மனைகளில் குப்பை கழிவுகளை கொட்டுவதை முற்றிலுமாக தவிர்த்துக் கொண்டு, சுகாதாரத்தை பேணி காக்க வேண்டும்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் பகுதியில் ரூ. 4 கோடியில் நகர மருத்துவமனை, குடிநீர் தொட்டி: நகர் மன்ற தலைவர் எஸ். எஸ் ஜெயமூர்த்தி தொடங்கி வைத்தார்

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரியில் 74-வது குடியரசு தின விழா நிகழ்ச்சி.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் மிஸ்வாக் சார்பாக 340 பயனாளிகளுக்கு பெருநாள் அன்பளிப்பு.

டைம்ஸ் குழு

Leave a Comment