கோட்டக்குப்பம் இப்ராஹிம் கார்டன் தெரு முனையில் தொடர்ந்து குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இது சம்பந்தமாக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்ட வந்த நிலையிலும் எதுவும் பயனளிக்கவில்லை.
கடந்த புதன்கிழமை(11/05/2022) அன்று அப்பகுதியில் குப்பைகளை கொட்டுவதை தவிர்க்க, கவுன்சிலர் ஏற்பாட்டில் மற்றும் கோட்டக்குப்பம் நகராட்சி சார்பாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. அதில் குப்பை கொட்டுவார்கள் மீது அபராதம் மற்றும் வழக்கு பதியப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையும், மக்கள் பொருட்படுத்தாமல் அங்கு குப்பைகள் மீண்டும் கொட்டி வந்தனர். இதனால், குப்பைகள் கொட்டுவதை முழுமையாக தடுக்க முடியவில்லை.
இந்நிலையில் குப்பைகள் கொட்டுவதை முற்றிலுமாக தடுக்கும் வகையில் 21-வது வார்டு கவுன்சிலர் சைத்தானி கவுஸ் அவர்கள் தனது சொந்த செலவில் தற்பொழுது அப்பகுதியில் 4 சிசிடிவி கேமரா அமைத்துள்ளார். இதில், 3 கேமரா இப்ராஹிம் கார்டன் தெரு முனையிலும் மற்றும் பட்டினத்தார் தெரு பகுதியில் ஒரு கேமராவும் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், வீதிகளில் குப்பை கொட்டும் நபர்கள் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு, குப்பை கொட்டும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.