புதுச்சேரியில் மின் ஊழியர்கள் இன்று 4-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், மாநிலம் முழுவதும் இருளில் தத்தளித்து வருகிறது. பல்வேறு இடங்களில் பொதுமக்கள் தர்ணா போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரி அரசின் மின் துறையை தனியார்மயமாக்க டெண்டர் அறிவிப்பு வெளியிட்டதையடுத்து, மின் துறை பொறியாளர்கள், ஊழியர்கள் உருவாக்கிய போராட்ட குழு செப்.28-ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி மின் துறை தலைமையகத்தில் இன்று 4-வது நாளாக அவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களிலும் மின் ஊழியர்கள் வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ளனர். இதனால் மின் பழுது, பராமரிப்பு, அலுவல் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் புதுச்சேரி மற்றும் கிராமப்புற பகுதிகளில் மின்பராமரிப்பின்றி மின் தடை ஏற்பட்டுள்ளது. சீர் செய்ய ஆளின்றி நீண்ட நேரம் மின் விநியோகம் இல்லாமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
இதனால் பாதிக்கப்படும் மக்கள், அந்தந்த பகுதிகளில் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மின்சாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து சிக்னல்களும் இயக்கபடவில்லை. மாநிலம் முழுவதும் இருளில் ஸ்தம்பித்துள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மேலும் மின்விநியோகம் இல்லாததால் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தலைமை செயலகத்தில் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். சுயேட்சை சட்டப்பேரவை உறுப்பினர்களான நேரு மற்றும் பிரகாஷ்குமார் தலைமை செயலகம் வாசலில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மாநிலம் முழுவதும் மின்தடை ஏற்பட்ட சம்பவம் பூதாகரமாக வெடித்ததை தொடர்ந்து மின்சாரத்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில், காவல்துறையினர், மின்துறை செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.