கோட்டக்குப்பம் ஜமியத் நகர் 12-வது வார்டு, கோட்டை அருகில் உள்ள ஒரு தெருவில் கழிவு நீர் சாலைகளில் தேங்கி, வீடுகள் முன்பு தெப்பம் போல் கழிவு நீர் காட்சி அளிக்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, கொசு தொல்லையும் அதிகரித்து பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
அதுமட்டுமில்லாமல், கடந்த சில மாதமாக கழிவுநீர் வெளியேறி சாலையில் முழுவதும் தேங்கி நிற்பதால் அப்பகுதி வழியாக 20-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு செல்லும் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதுகுறித்து நகராட்சியிடம் தெரிவித்தும் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
உடனடியாக சாலைகளில் ஓடும் கழிவுநீர் பிரச்னைக்கு கோட்டக்குப்பம் நகராட்சி தீர்வு காண வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.