கோட்டக்குப்பம் நகராட்சி முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்கவும், நகராட்சி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான துணை மின் நிலையத்தை உடனடியாக அமைத்திடவும், கோட்டக்குப்பம் மக்கள் நல கூட்டமைப்பு சார்பில் தொடர் முழக்க கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் கடையடைப்பு கடந்த மாதம் நடைபெற்றது.
அதில், “கோட்டக்குப்பம் பகுதிக்கு டிசம்பர் 31க்குள் துணை மின் நிலையம் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும், தவறும் பட்சத்தில் அடுத்த கட்ட போராட்டம் தொடரும்” என கோட்டக்குப்பம் மக்கள் நல கூட்டமைப்பு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், கோட்டக்குப்பம் மக்கள் நல கூட்டமைப்பினர், கோட்டக்குப்பம் மின்சார வாரிய இளமின் பொறியாளர் ஆதிமூலம் அவர்களை நேற்று (27/11/2023) சந்தித்து, தொடர் மின்வெட்டை சரி செய்ய என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்பதை கேட்டறிந்தனர்.
கோட்டக்குப்பம் பகுதியில் சுமார் 70 சதவீதம் பாலிமர் இன்சுலேட்டர்கள் மாற்றப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள பாலிமர் இன்சுலேட்டர்களை அடுத்த பராமரிப்பு பணி அன்று நடைபெற உள்ளதாகவும், மேலும் துணை மின் நிலையம் அமைக்கும் இடங்களை கையகப்படுத்தும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்படுவதாகவும் இளமின் பொறியாளர் தெரிவித்தார்.
இறுதியாக, கோட்டக்குப்பம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான துணை மின் நிலையம் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்குமாறும், கோட்டக்குப்பத்தில் நிலவிவரும் தொடர் மின்வெட்டையும், குறைவழுத்த மின்சாரத்தை சீர் செய்யுமாறும் மக்கள் நல கூட்டமைப்பினர் கேட்டுக் கொண்டனர்.