டெக்னாலஜியில் கொடிகட்டி பறக்கும் இந்தியாவில், பல கிராமப்புற ஊராட்சிகளில் கூட சீரான மின்வினியோகம் வழங்கப்படும் நிலையில், கோட்டக்குப்பம் பகுதியில் மட்டும் அடிக்கடி பவர் கட் செய்யப்படுவது வாடிக்கையாக்கிவிட்டது. தொடர் மின்வெட்டு இன்னும் 15 நாட்கள், 30 நாட்களில் சரி செய்யப்படும் என்ற புராணம் அவ்வப்போது மின்துறை அதிகாரிகளால் தெரிவிக்கப்படும் நிலையில், நாட்கள் செல்ல செல்ல தொடர் மின்வெட்டு எந்த மாற்றமும் இல்லாமல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இந்நிலையில் இன்று(10/09/2024), கோட்டக்குப்பம் பகுதியில் பல மணி நேரம் மின்விநியோகம் தடை செய்யப்பட்டது. இதனையடுத்து, கோபமடைந்த சமூக ஆர்வலர்கள் ஒன்று திரண்டு, மாலை 6 மணி அளவில் கோட்டக்குப்பம் மின்வாரியம் அலுவலக வாசலில் தொடர் மின்வெட்டால் பழுதடைந்த தொலைக்காட்சி பெட்டி மற்றும் மின் சாதன பொருட்களுக்கு மாலை அணிவித்து நூதன முறையில் முற்றுகை போராட்டம் செய்தனர்.
தகவல் அறிந்த கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் விஸ்வநாதன் சம்பவ இடத்திற்கு விரைந்து சமூக ஆர்வலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின், சம்பவ இடத்திற்கு விரைந்த இளமின் பொறியாளர் ஆதிமூலம், புதிய மின் பாதையின் பணி முழுவதுமாக நிறைவுற்றதாகவும், எதிர் வரும் சில தினங்களில் புதிய மின் பாதை வழியாக முழுமையாக மின்சாரம் வழங்கப்படும் என்பதனை தெரிவித்தார். இதனை ஏற்று அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால், சிறிது நேரம் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.