28.2 C
கோட்டக்குப்பம்
January 22, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் பர்கத் நகர் பரிதாபங்கள்!

புயலோ பெருமழையோ ஏற்பட்டால் கோட்டக்குப்பம் பகுதியில் முதலில் பாதிக்கப்படுவது பர்கத் நகர் பகுதியாக இருந்து வருகிறது. அதன்படி தற்பொழுது ஏற்பட்ட ஃபெஞ்சல் புயலில் பர்கத் நகர் பகுதியும் பாதிக்கப்பட்டுள்ளது.

புயல் வந்தால் மழை வரும், மழை நீரால் அப்பகுதி முழுவதும் மழை நீரால் சூழப்பட்டு இயல்பு வாழ்க்கையை பாதிக்கும். அதன் பிறகு, நகராட்சி செயல்பாட்டால் அந்த தேங்கிய தண்ணீரை வெளியேற்றப்படும் இதுவே வாடிக்கையாக உள்ளது.

அது போன்று இப்போது வந்த புயலால் பெரும் பாதிப்பு இல்லாவிட்டாலும் 13, 12, 11, 10, 7, 8, 9-வது எக்ஸ்டென்ஷன் போன்ற குறுக்குத் தெருக்களில் மழை நீர் சூழ்ந்தது. இதனால் இப்பகுதியை சேர்ந்த மக்கள் இரு தினங்கள் பெறும் அவதிப்பட்டார்கள். சில வீடுகளில் வீட்டு உபயோக பொருட்கள் பழுதாகிவிட்டது.

இது ஆண்டாண்டு காலமாக வாடிக்கையாக இருந்து வருகிறது. தற்போதைய வடகிழக்கு பருவமழையில் ஜமியத் நகர் பகுதி முழுவதும் தண்ணீரால் மூழ்கி அப்பகுதி மக்களை பெரும் சோகத்திற்கு உள்ளாக்கியது. அப்பகுதியில் வீடு கட்டி குடியேறிய குடியிருப்பு வாசிகளுக்கு ஒவ்வொருவருக்கும் லட்ச ரூபாய்க்கும் மேற்பட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இது அப்பகுதி மக்களின் பெரும் பாதிப்பாக கருதப்படுகிறது. அவ்வாறு ஒரு ஆள் மூழ்கும் அளவிற்கு அளவிற்கு வெள்ள நீர் சூழ்ந்த அந்தப் பகுதியில் மூன்று நாட்கள் கழித்து குடிநீர் வினியோகம் சீர் செய்யப்பட்டுள்ளது.

ஆனால், பெரும் பாதிப்பு ஏற்படாத பர்கத் நகர் பகுதியில் கடந்த ஆறு நாட்களாக மக்களுக்கு சரியான குடிநீர் வினியோகம் இல்லாமல் அல்லல்பட்டு வருகிறார்கள்.

மக்களின் துயர் துடைக்க 22-வது மற்றும் 15-வது வார்டு நகரமன்ற உறுப்பினர்கள் பெரும் முயற்சி செய்து பகுதி மக்களின் பெறும் கஷ்டத்தை சிறிது போக்க குடிநீர் லாரிகளின் மூலமாக கொடுத்து வருகிறார்கள். இருந்தாலும் அவர்கள் கொடுக்கும் தண்ணீர் மக்களின் அனைத்து தேவைகளுக்கும் பூர்த்தியாகாமல் மக்கள் பெரும் சிரமப்பட்டு வருகிறார்கள்.

குடிநீரை சேமித்து வைக்கும் கீழ்நிலை தொட்டி (சம்பு) அமைந்திருக்கும் பகுதியில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் குடிநீரை சேமித்து வைக்கவும், சேமித்த நீரை மேல் தொட்டிக்கு ஏற்றவும் முடியவில்லை என்று வழக்கமான காரணங்களை கூறி வருகிறார்கள்.

இந்த நிலை கடந்த 10 வருடங்களாக தொடர்ந்து வருவது மிகவும் வேதனைக்குரியது. வெள்ள நீர் சூழும் பகுதியில் சம்பு தொட்டியை கட்டினால், தண்ணீர் வரத்தானே செய்யும் அந்த அடிப்படை விசயம் தெரிந்தவர்கள் அப்பகுதியில் வெள்ளநீர் சூழாத வகையில் அப்பகுதியை இதுவரையில் பாதுகாக்காது ஏன்? ஒவ்வொரு மழைக்காலத்திலும், ஜெனரேட்டர்கள் வெள்ளத்தில் மூழ்கிவிட்டதாக நகராட்சி நிர்வாகம் கூறுவது வழக்கமாகிவிட்டது. ஆனால், இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக, ஜெனரேட்டர்களை உயரமான இடத்தில் வைப்பதற்கான நடவடிக்கை ஏன் இதுவரை எடுக்கப்படவில்லை என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

தாழ்வான அப்பகுதியை வெள்ளநீர் சூழாத வகையில் மேடாக இதுவரையும் மாற்றி வைக்காமல் சிறிது மழை பெய்தாலும் அப்பகுதியில் வெள்ள நீ சூழ்ந்து விடுகிறது. இதனால் தண்ணீர் ஏற்றுவதற்கான சூழ்நிலை அமையாமல் அதற்கான சுவிட்சைகளை போடுவதற்கு முடியாமல் ஊழியர்கள் தவிப்பதையும் காரணமாக சொல்லி வருகிறார்கள்.

நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு வரி இனங்களை அதிக அளவில் வசூலித்து வரும் கோட்டக்குப்பம் நகராட்சி, பர்கத் நகர் பகுதியை A-zone என்று அறிவித்துவிட்டு அதிகப்படியான வரி வசூல் செய்து கொண்டு அதற்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காமல் இந்த 10 ஆண்டுகளாக இதே காரணங்களை சொல்லி அப்பகுதி மக்களை வஞ்சித்து வருவது மிகவும் கண்டனத்துக்குரியது.

ஆண்டுதோறும் ஏற்படும் பருவ மழையில் அடிக்கடி மூழ்கும் அப்பகுதியை வெள்ளம் சூழா வண்ணம் பாதுகாக்க இதுவரையில் நிரந்தரமான திட்டம் தீட்டாமல் தற்காலிக ஏற்பாடுகளை செய்து அப்பகுதி மக்களை கஷ்டப்படுத்தி வருகிறார்கள்.

கடந்த சனிக்கிழமை முதல் சரியான குடிநீர் கிடைக்காமல் கடந்த ஆறு நாட்களாக அப்பகுதி மக்கள் பெரும் சிரமப்பட்டு வருகிறார்கள்.

அப்பகுதி மக்களின் சிரமத்தை அறிந்து தனக்காக வாக்களித்து வெற்றி பெறச் செய்த மக்களை பாதுகாக்கும் நோக்கில் நகர மன்ற உறுப்பினர்கள் பம்பரமாக சுழன்று வேலை செய்தாலும் அவர்களின் அதிகப்படியான சக்தியை செலவு செய்து அவர்கள் வேலை செய்தாலும் அப்பகுதி மக்களின் தேவைகளை அவர்களால் முழுமையாக நிறைவேற்ற முடியாமல் மிகவும் அவர்களும் சிரமப்படுகிறார்கள்.

இந்த அவல நிலையை நகராட்சி நிர்வாகம் தற்காலிக சமாளிப்பாக இல்லாமல் வருங்காலங்களில் அப்பகுதியில் மழைநீர் தேங்கா வண்ணமும் இடர் காலங்களில் சீரான குடிநீர் வழங்க கூடிய வகையில் திட்டங்களை தீட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

இதில், இன்னும் ஒரு பெரிய கொடுமை என்னவென்றால் குடிநீர் வழங்கக்கூடிய கீழ்நிலை தொட்டியும் அப்பகுதி மக்கள் அன்றாடம் வெளியேற்றும் கழிவுநீரை சேகரிக்கும் தொட்டியும் ஒரே இடத்தில் அமைந்து இருப்பது இன்னும் வியப்புக்குரியது.

தற்போது சூழ்ந்துள்ள வெள்ளத்தில் குடிநீர் தொட்டி நீரும், கழிவுநீர் தொட்டி நீரும் ஒன்றாக கலந்திருப்பது பெரும் ஆபத்தாக உள்ளது. இவ்வாறு சரியான திட்டமிடல் இல்லாமல் இரு தொட்டிகளையும் ஒரே இடத்தில் அமைத்திருப்பது மக்களின் சுகாதாரத்திற்கு பாதிப்புகளை ஏற்படுத்தும்.

கழிவுநீர் வெளியேற்ற வழி இல்லாமல் அப்பகுதி மக்கள் பல போராட்டங்கள் செய்த நிலையில் கழிவு நீர் சேகரிக்கும் தொட்டியை அமைத்து அங்கிருந்து மோட்டார் மூலம் கழிவு நீரை வெளியேற்றும் வகையில் அமைக்கப்பட்டது. அந்த கழிவு நீரை வெளியேற்றுவதற்கு பல தடவை கோரிக்கை மனு கொடுத்தும் செய்யாத நிலையில் மக்கள் பெரும் போராட்டம் செய்ததின் விளைவாகவே இந்த கழிவுநீர் வெளியேற்றதற்கான வழிவகை செய்தார்கள்.

அதேபோன்று, தற்போது குடிநீர் தொட்டி அருகே வெள்ளநீர் சூழாமல் இருக்க போராட்டத்தை இந்த நகராட்சி நிர்வாகம் எதிர்பார்த்து காத்திருக்கிறதா? அப்போதுதான் அதற்கு வழிவகை செய்வார்களா என்று அப்பகுதி மக்கள் கேட்கிறார்கள்.

அனைத்து வசதிகளையும் ஒருங்கேபெற்ற இக்காலகட்டத்திலும் இப்பகுதி மக்கள் குடிநீருக்காக சிரமப்படுவது மிகவும் துரதிஷ்டவசமானது.

தற்போது பர்கத் நகர் குடிநீர் பைப்புகள் சரி செய்யப்பட்டு இன்று மாலை முதல் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. எனினும் மழை மீண்டும் வந்தால் அதே பழைய நிலைமைக்கு தள்ளப்படும். பர்கத் நகரின் இந்த பரிதாப நிலைக்கு எப்போதுதான் நிரந்தர தீர்வு கிடைக்கும்!!??

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் அணைக்குடியார் தெரு முன் பகுதியில் சைடு வாய்க்கால் அமைக்க கோரி நகர்மன்ற தலைவர் மற்றும் கவுன்சிலருக்கு மனு.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் பகுதி மக்களின் அன்பைப் பெற்ற டிஎஸ்பி அஜய் தங்கம் இடமாற்றம்.

டைம்ஸ் குழு

பொது இடங்களில் மது அருந்துவோர் மீது சட்டப்படி நடவடிக்கை: கோட்டக்குப்பம் புதிய காவல் ஆய்வாளர் ராபின்சன் எச்சரிக்கை.

டைம்ஸ் குழு

Leave a Comment